You will make it....

You will make it....

Friday, January 30, 2009

முத்துகுமார் மரணம் சாதித்தது என்ன?

அனைவரின் மனதையும் பாதித்த விஷயம் முத்துகுமாரின் மரணம். இந்த சம்பவம் மனதை பாதித்தது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த மரணம் சாதித்தது என்ன என்பதை பற்றி யோசித்தால் ஒருவித வெறுமைதான் மனதில் மிஞ்சுகிறது.

அவர் எழுதியதாக ஒரு கடிதம் வலைப்பதிவில் வலம் வருகிறது. இவ்வளவு தெளிவாக சிந்திக்கும் ஒரு மனிதன் தற்கொலை என்னும் முடிவை அவ்வளவு எளிதாக எடுத்து விடுவாரா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. இவர் இப்படி ஒரு முடிவு எடுத்து சாதித்தது என்ன? பிரச்னைகளை கண்டு உயிரை விடுவது கோழைத்தனம் என்பது இவருக்கு தெரியாமல் போய் விட்டதா? இவர் இன்று உயிரை விட்டதும் இலங்கை பிரச்னை உடனே முடிவுக்கு வந்துவிட போதிறதா? இத்தனை ஆண்டுகாலமாக இலங்கையில் நடக்கும் இந்த பிரச்னை இந்த ஒரு உயிர் போனதும் தீர்ந்துவிட போதிறதா? நிச்சயமாக இல்லை என்பது கண்டிப்பாக முதுகுமாருக்கும் தெரிந்திருக்கும். பின் ஏன் இந்த தற்கொலை?

ஒருவேளை அடுத்தவர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்று அவர் நம்பினாரா அல்லது நம்பிக்கை ஊட்டப்பட்டரா? அவ்வளவு தெளிவாக பிரச்னையை அலசும் மனம் படைத்த நபர் தற்கொலை செய்துகொண்டார் என்பது சாமானியனின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் படும் அவதி நிறுத்தப்பட வேண்டும், அங்கிருக்கும் நம் சகோதரர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும், அவர்களின் பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து இலங்கைத்தீவு தன் இன்முத்தை வெளிஉலகுக்கு காட்டி அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம். இதில் நமக்கு மாற்றுகருத்து இல்லை. ஆனால் முத்துகுமாரின் முடிவு இந்த விஷயத்தில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இதை வைத்து சிலர் அரசியல் செய்வார்கள். அவ்வளவுதான்.

சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு உயிர் விட வேண்டும் என்றால் உலகின் எந்த நாட்டிலும் எவருமே உயிரோட இருக்க முடியாது. இந்தியாவில் தீவிரவாதத்தால் அடிக்கடி மரணம் நிகழ்கிறது, சாதி மத மோதல்களால் மரணம் நிகழ்கிறது, ரவுடியிசத்தால் மரணம் நிகழ்கிறது. இப்படி தொடர் நிகழ்வுகள் பலவற்றால் மரணம் மட்டுமின்றி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் யாராவது தற்கொலை செய்துகொள்கிரார்களா? அந்த பிரச்னையால் நேரடியாக பாதிக்கப்பட்டு, அடுத்தவன் கொல்லும் முன் தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் உண்டு, அடுத்தவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் இல்லையே?

இறந்து போராட முடியாது, இருந்துதான் போராட முடியும். இருந்து போராடுவது எப்படி என்பதை நம் அரசியல்வாதிகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து சாகாமலேயே அதை முடித்துக்கொண்டார் என்பது முத்துக்குமாருக்கு தெரியாதா? கலைஞர் தமிழுக்காக உயிரை விடத் தயார் என்று எத்தனை வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது முத்துக்குமாருக்கு தெரியாதா? இலங்கை தமிழர்கள் விஷயத்தில் வேகமான போராட்டம் நடத்தப் போகிறோம் என்று ராமதாஸ் சொல்லிக்கொண்டிருக்கிறாரே அது முத்துக்குமார் கண்ணில் படவில்லையா? இப்படி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை முத்துக்குமார் மிக நன்றாகவே தெரிந்துவைதிருப்பார். ஏனென்றால் அவர் ஒரு மாத இதழில் நிருபராக இருந்தார் என்று தெரியவருகிறது. பொறுப்பில் இருப்பவர்கள் மேலே கூறிய மாதிரி பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது முத்துக்குமாருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் தன் தற்கொலையால் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை என்பதும் கண்டிப்பாக, மிக மிக உறுதியாக முத்துக்குமாருக்கு தெரிந்திருக்கும். இப்படி அனைத்தும் தெரிந்தும் ஏன் தற்கொலை?

இந்த தற்கொலையால் கண்டிப்பாக முத்துக்குமார் குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும். நிறைய அரசியல்வாதிகள் அவர் வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர் வீடு இருக்கும் கிராமத்தில் இருக்கும் மக்கள் விதவிதமான வாகனங்களை பார்க்கலாம். இன்னும் ஒரு சில நாட்கள் முத்துக்குமார் ஊடகங்களால் பேசப்படுவர், எழுதப்படுவார். நமது அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை பெரிது படுத்தி ஒவ்வொரு மேடையிலும் பேசுவார்கள். கிராமத்தில் அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று சிலர் போராடலாம், சிலை கூட வைக்கப்படலாம். தமிழின தியாகி என்று அவருக்கு பட்டம் கிடைக்கலாம். தமிழ் மேல் பாசமுள்ள சில அரசியல்வாதிகள் வருடாவருடம் அவர் நினைவு நாளை கொண்டாடலாம், அப்படி கொண்டாட போகிறோம் என்று சொல்லி பொது மக்களிடம் வசூல்வேட்டை நடத்தலாம். இப்படி இன்னும் எத்தனையோ "லாம்". இதைவிட பயன் ஒன்றும் கிடைத்து விட போவது இல்லை - ஒரு சிலரின் அனுதாபம் மற்றும் குடும்பத்தினரின் கஷ்டத்தை தவிர.

அவருடைய குடும்பத்தினருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

கீழே இருக்கும் சுட்டியை சொடுக்கி, இட்லிவடையின் கருத்தையும் பாருங்கள்.
http://idlyvadai.blogspot.com/2009/01/blog-post_30.html

Tuesday, January 27, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 1

இதே தலைப்பில் முன்னுரையை தொடர்ந்து, இப்போது பங்கு என்றால் என்ன என்று பார்க்க போகிறோம்.

ஒரு தொழில் நடத்த முதலீடு வேண்டும். அந்த முதலீட்டை ஒருவரே செய்தால் அவரை உரிமையாளர் என்கிறோம். அதாவது அந்த தொழிலில் இருந்து வரும் லாப நஷ்டங்கள் அவர் ஒருவரையே சேரும். இதை proprietorship என்கிறோம். அதே முதலீட்டைஇரண்டு அல்லது மூன்று பேர் சேர்த்து செய்தல் லாப நஷ்டங்கள் அதனை பங்குதாரரையும் சேரும். இதை partnership என்கிறோம்.

மேலே சொன்ன முறையில் பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டுவது கஷ்டமான காரியம். உதாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது இயலாத காரியம். ஆக நிறய முதலீடு தேவைப்படும் தொழில் என்றால் அதுக்கு பணத்தை நிறைய பேரிடம் முதலீடாக வாங்கி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்க படுகிறது. அப்படி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்கும் போது, முதலீட்டை சிறு சிறு பாகங்களாக பிரித்து (பங்கு) ஒவ்வொருவரும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் பங்கு முதலீடு என்பது.

சரி ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கிவிட்டோம் (எப்படி பங்கு வாங்கலாம் என்பது பற்றி அப்புறம் எழுதுகிறேன்). நமக்கு பணம் தேவை படும் போது அந்த பங்குகளை விற்க நினைக்கிறோம் என்றால் யாரிடம் விற்பது? இதற்காத உருவாக்க பட்டதுதான் பங்கு சந்தை. இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறுவனத்தில் பங்கு வாங்கியிருந்தாலும், அந்த நிறுவனம் நம்மிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்காது. ஒரு நிறுவனம் தான் வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குகிறது என்றால், அது தன்னுடைய மூலதனத்தை திருப்பி கொடுக்கிறது என்று அர்த்தம். அப்படி திருப்பி கொடுத்தால் அந்த நிறுவனம் எப்படி தொழில் செய்ய முடியும்? ஆக ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டு பணம் பெற்றுகொண்டது என்றால், அந்த பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தராது. நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, மூடியதும் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர் வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.

இப்படி பொதுமக்களிடம் இருந்து முதலீடாக வாங்கிய பணத்தை வைத்து கம்பெனியை நிர்வாகம் செய்வது யார்? proprietorhsip என்றால் முதலாளியாக இருக்கும் நபர் நிர்வாகத்தை கவனித்து கொள்வார். partnership என்றால் partners நிர்வாகத்தை கவனித்து கொள்வார்கள். கம்பனியில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது. எனவே கம்பனி நிர்வாகம் குறிப்பிட்ட சில நபர்களிடம் ஒப்படைக்கப்படும். கம்பனியை நிர்வகிக்கும் நபர்களை board of directors என்று சொல்கிறோம். கம்பனியை ஆரம்பிக்க முயற்சி எடுத்தவர் கம்பனியில் அதிக ஷேர் வைத்திருப்பார். அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் (சத்யம் ராஜு மாதிரி) .

ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது அல்லது அதன் விருவாக்கதிற்கு பணம் தேவை படும் போது ஷேர் வெளியிடும். அப்படி வெளியிடப்படும் ஷேர்களை நாம் நேரடியாக கம்பனியிடமே வாங்கிகொள்ளலாம். ஒரு நிறுவனம் முதன்முறையாக ஷேர் வெளியிடும் போது அதை IPO (Initial Public Offer) என்கிறோம்.

கம்பனி ஷேர் வெளியிடும் போது நம்மால் வாங்க முடியவில்லை என்றால், அதே கம்பனி பங்குகளை நாம் எப்படி வாங்குவது? இங்குதான் பங்கு சந்தை என்னும் இடம் தேவைப்படுகிறது. ஆக நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்கவோ அல்லது ஒரு கம்பனி நல்ல நிலையில் செயல்படுகிறது என்று முடிவு செய்து அந்த கம்பனியில் பங்குகளை நாம் வாங்க வேண்டும் என்றாலோ நாம் நாட வேண்டிய இடம் பங்கு சந்தை. பங்கு சந்தையில் பங்குகள் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பணம் கம்பனிக்கு போய் சேராது. அது பங்கு வாங்குபவர் விற்பவரோடு முடிந்து விடும். இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். கம்பனிக்கு எந்தவித லாபமும் இல்லாமல் ஏன் பங்குகளை பங்கு சந்தையில் அனுமதிக்கிறது? ஏனென்றால் அந்த கம்பனியில் முதலீடு செய்தால் எப்போ வேண்டுமானாலும் நம் பணத்தை நாம் பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்று எடுத்துக்கொள்ள முடியும் என்று முதலீட்டளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதுவுமில்லாமல், பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிகமானால் கம்பனியை ஆரம்பிதவருடைய பங்குகளின் மதிப்பும் கூடும். இதுதான் பங்கு பரிவர்த்தனை அல்லது பங்கு சந்தையின் அடிப்படை.

இனிவரும் பதிவுகளில் பங்குகளை வாங்குவது விற்பது எப்படி, பங்குகளை select செய்வது எப்படி, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் விரிவாக பார்க்கலாம்.

உங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

Saturday, January 24, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - முன்னுரை

கடந்த ஐந்து அல்லது ஆறு வருடங்களாக நம் நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட பங்கு சந்தை பற்றி பேசுவது ஒரு வழக்கமாக ஆகி விட்டது. பங்கு சந்தையில் முதலீடு செய்யாவிட்டால் அது ஒரு பெரிய இழுக்கு என்று கூட சிலர் நினைக்கும் அளவு பங்கு சந்தை பற்றிய ஒரு வித மோகம் நிறைய பேருக்கு இருந்தது என்னவோ உண்மை.

பங்கு சந்தையில் நல்ல லாபம் வரும் போது அனைவரும் சந்தோஷமாக ஏற்றுகொண்டார்கள். அப்போது கூட சிலர் இது சூதாட்டம் என்று சொல்லி கொண்டுதான் இருந்தார்கள். பணம் சம்பாதிப்பவர்களோ இது என் திறமை என்று சொல்லி கொண்டார்கள், இது ஒரு சூதாட்டம் என்று சொல்லிகொண்டிருந்தவர்களில் அநேகம் பேர் பணத்தை இழந்தவர்களாக இருந்தார்கள்.

உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? இது பற்றி ஒரு தெளிவு வேண்டும் என்றல் நாம் நிறைய விஷயங்களை அலச வேண்டியிருக்கும். பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் அலச வேண்டியிருக்கும்.

அப்படி பட்ட ஒரு அலசலை நாம் இந்த தொடரில் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாம் லாபம் ஈட்டினாலும் சரி நஷ்டம் அடைந்தாலும் சரி, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிக மிக அவசியமானது. எனவே இந்த தொடரில் அது பற்றி அலசலாம்.

பங்கு சந்தை பற்றி பேச போகிறோம் என்றதும் இது ஒரு டெக்னிக்கல் சம்பந்த பட்ட ஒரு விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம். அடிப்படையில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக மேற்கொண்டு தெரிந்து கொள்வோம்.

ஆக நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வார்த்தை பங்கு சந்தை. பங்கு சந்தை என்றால் பங்குகளை விற்கும் இடம் என்று நம் அனைவருக்கும் தெரியும். "பங்கு" என்றால் என்ன? இது பற்றி வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.
Page copy protected against web site content infringement by Copyscape