அனைவரின் மனதையும் பாதித்த விஷயம் முத்துகுமாரின் மரணம். இந்த சம்பவம் மனதை பாதித்தது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த மரணம் சாதித்தது என்ன என்பதை பற்றி யோசித்தால் ஒருவித வெறுமைதான் மனதில் மிஞ்சுகிறது.
அவர் எழுதியதாக ஒரு கடிதம் வலைப்பதிவில் வலம் வருகிறது. இவ்வளவு தெளிவாக சிந்திக்கும் ஒரு மனிதன் தற்கொலை என்னும் முடிவை அவ்வளவு எளிதாக எடுத்து விடுவாரா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. இவர் இப்படி ஒரு முடிவு எடுத்து சாதித்தது என்ன? பிரச்னைகளை கண்டு உயிரை விடுவது கோழைத்தனம் என்பது இவருக்கு தெரியாமல் போய் விட்டதா? இவர் இன்று உயிரை விட்டதும் இலங்கை பிரச்னை உடனே முடிவுக்கு வந்துவிட போதிறதா? இத்தனை ஆண்டுகாலமாக இலங்கையில் நடக்கும் இந்த பிரச்னை இந்த ஒரு உயிர் போனதும் தீர்ந்துவிட போதிறதா? நிச்சயமாக இல்லை என்பது கண்டிப்பாக முதுகுமாருக்கும் தெரிந்திருக்கும். பின் ஏன் இந்த தற்கொலை?
ஒருவேளை அடுத்தவர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என்று அவர் நம்பினாரா அல்லது நம்பிக்கை ஊட்டப்பட்டரா? அவ்வளவு தெளிவாக பிரச்னையை அலசும் மனம் படைத்த நபர் தற்கொலை செய்துகொண்டார் என்பது சாமானியனின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் படும் அவதி நிறுத்தப்பட வேண்டும், அங்கிருக்கும் நம் சகோதரர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும், அவர்களின் பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து இலங்கைத்தீவு தன் இன்முத்தை வெளிஉலகுக்கு காட்டி அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பம். இதில் நமக்கு மாற்றுகருத்து இல்லை. ஆனால் முத்துகுமாரின் முடிவு இந்த விஷயத்தில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இதை வைத்து சிலர் அரசியல் செய்வார்கள். அவ்வளவுதான்.
சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு உயிர் விட வேண்டும் என்றால் உலகின் எந்த நாட்டிலும் எவருமே உயிரோட இருக்க முடியாது. இந்தியாவில் தீவிரவாதத்தால் அடிக்கடி மரணம் நிகழ்கிறது, சாதி மத மோதல்களால் மரணம் நிகழ்கிறது, ரவுடியிசத்தால் மரணம் நிகழ்கிறது. இப்படி தொடர் நிகழ்வுகள் பலவற்றால் மரணம் மட்டுமின்றி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் யாராவது தற்கொலை செய்துகொள்கிரார்களா? அந்த பிரச்னையால் நேரடியாக பாதிக்கப்பட்டு, அடுத்தவன் கொல்லும் முன் தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் உண்டு, அடுத்தவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று தன்னை மாய்த்துக் கொண்டவர்கள் இல்லையே?
இறந்து போராட முடியாது, இருந்துதான் போராட முடியும். இருந்து போராடுவது எப்படி என்பதை நம் அரசியல்வாதிகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். திருமாவளவன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து சாகாமலேயே அதை முடித்துக்கொண்டார் என்பது முத்துக்குமாருக்கு தெரியாதா? கலைஞர் தமிழுக்காக உயிரை விடத் தயார் என்று எத்தனை வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது முத்துக்குமாருக்கு தெரியாதா? இலங்கை தமிழர்கள் விஷயத்தில் வேகமான போராட்டம் நடத்தப் போகிறோம் என்று ராமதாஸ் சொல்லிக்கொண்டிருக்கிறாரே அது முத்துக்குமார் கண்ணில் படவில்லையா? இப்படி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை முத்துக்குமார் மிக நன்றாகவே தெரிந்துவைதிருப்பார். ஏனென்றால் அவர் ஒரு மாத இதழில் நிருபராக இருந்தார் என்று தெரியவருகிறது. பொறுப்பில் இருப்பவர்கள் மேலே கூறிய மாதிரி பம்மாத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது முத்துக்குமாருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் தன் தற்கொலையால் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை என்பதும் கண்டிப்பாக, மிக மிக உறுதியாக முத்துக்குமாருக்கு தெரிந்திருக்கும். இப்படி அனைத்தும் தெரிந்தும் ஏன் தற்கொலை?
இந்த தற்கொலையால் கண்டிப்பாக முத்துக்குமார் குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும். நிறைய அரசியல்வாதிகள் அவர் வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர் வீடு இருக்கும் கிராமத்தில் இருக்கும் மக்கள் விதவிதமான வாகனங்களை பார்க்கலாம். இன்னும் ஒரு சில நாட்கள் முத்துக்குமார் ஊடகங்களால் பேசப்படுவர், எழுதப்படுவார். நமது அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை பெரிது படுத்தி ஒவ்வொரு மேடையிலும் பேசுவார்கள். கிராமத்தில் அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று சிலர் போராடலாம், சிலை கூட வைக்கப்படலாம். தமிழின தியாகி என்று அவருக்கு பட்டம் கிடைக்கலாம். தமிழ் மேல் பாசமுள்ள சில அரசியல்வாதிகள் வருடாவருடம் அவர் நினைவு நாளை கொண்டாடலாம், அப்படி கொண்டாட போகிறோம் என்று சொல்லி பொது மக்களிடம் வசூல்வேட்டை நடத்தலாம். இப்படி இன்னும் எத்தனையோ "லாம்". இதைவிட பயன் ஒன்றும் கிடைத்து விட போவது இல்லை - ஒரு சிலரின் அனுதாபம் மற்றும் குடும்பத்தினரின் கஷ்டத்தை தவிர.
அவருடைய குடும்பத்தினருக்கு நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
கீழே இருக்கும் சுட்டியை சொடுக்கி, இட்லிவடையின் கருத்தையும் பாருங்கள்.
http://idlyvadai.blogspot.com/2009/01/blog-post_30.html
1 comment:
Rightly pointed out and Great Article... Emotions can not produce the results.. Think Rationally and do something for your community...
Post a Comment