You will make it....

You will make it....
Showing posts with label Swing Trading. Show all posts
Showing posts with label Swing Trading. Show all posts

Saturday, July 16, 2011

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 7)

இன்றைய பதிவில் Line Chart பற்றி பாப்போம். முதலில் இது எந்த முறையில் உருவாகிறது என்று பாப்போம். தினமும் ஒரு பங்கின் முடிவு விலையை வைத்து இந்த chart உருவாகிறது. இதில் ஒரு நாளையை Open , High , Low , Close போன்ற விபரங்கள் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஒரு பங்கின் முடிவு விலையை வைத்து உருவாக்கப்படும் இந்த chart நமக்கு பல தகவல்களை அள்ளிக்கொடுக்கும். ஒரு பங்கின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறதா அல்லது இறங்குமுகத்தில் இருக்கிறதா என்பதை இந்த Line chart -ஐ வைத்து ஓரளவு கணிக்க முடியும். உதாரணமாக கீழே உள்ள Sample chart -ஐ பாருங்கள்.



ஒரு பங்கின் இன்றைய முடிவு விலை முந்தைய நாளின் முடிவு விலையை விட அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். எந்த ஒரு பங்குமே ஒரே நேர் கோடாக மேலேயோ அல்லது கீழேயோ போவதில்லை. ஏற்ற இறக்கங்களுடன் தான் விலை இருக்கும். அதனால் முந்தய நாள் மற்றும் முன்றைய அதிக விலை (High) முதலியவற்றை கவனிக்க வேண்டும். ஒரு பங்கு முந்தைய அதிக விலைக்கு மேலே முடிந்தால் அது மேலே போக வாய்புகள் அதிகம் - இதை Higher High என்று சொல்லுவோம். அதே மாதிரி முந்தைய குறைந்த விலையை விட தற்போது உள்ள குறைந்த விலை அதிகமாக இருக்க வேண்டும் இதை Higher Low என்று சொல்லுவோம். ஆக ஒரு பங்கு Higher High மற்றும் Higher Low ஆக இருந்தால் அது மேலே போக வாய்ப்புகள் அதிகம் என்று நம்பலாம். மேலே இருக்கும் chart -ஐ இப்பொழுது பாருங்கள் பங்கு மேலே போகும் போது Higher High மற்றும் Higher Low -வாக இருப்பது உங்களுக்கு புரியும். இதற்கு அப்படியே எதிர்மறையான விளைவுகளை தரக்கூடியது Lower High மற்றும் Lower Low. ஒரு பங்கு முன்றைய உயர்ந்தவிலையை தொடாமல் கீழே இறங்க ஆரம்பிக்க்ரியது என்றால் அது கீழே போவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரி இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம். முந்தைய அதிக விலை என்றால் என்ன? ஒரு chart -ஐ பார்க்கும் போது அதில் எத்தனையோ அதிக விலை இருக்கிறதே நாம் எந்த விலையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சந்தேகம் வரலாம். இது ரொம்ப சிம்பிள் ஆன விஷயம். இன்றைய முடிவுக்கு முன்பு அதிகமான விலை என்னவோ அதைதான் அதிக விலையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே மாதிரிதான் குறைந்த விலையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலே கொடுத்திருக்கும் chart -இல் இதெல்லாம் குறிக்கப்பட்டுள்ளது. ஆக முந்தைய அதிக விலை என்பது இதற்கு முன்பு பங்கு எந்த விலையில் இருந்து இறங்க ஆரம்பித்ததோ அதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை போல் இன்னும் பல chart -ஐ நீங்கள் பார்த்தால் உங்களுக்கு நிறைய விஷயம் புரியவரும். அதனால் அடுத்த பதிவு வரும் வரை சில chart பாருங்கள்.

Thursday, July 7, 2011

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 6)

இதுவரை பங்கு வர்த்தகம் பற்றிய தொடரில், நாம் தெரிந்துகொண்ட விஷயங்கள் என்று பார்தோமென்றால், Empty Zone , Volume, Entry Level, Volume -கும் பங்கின் விலைக்கும் உள்ள சம்மந்தம், எந்த சந்தர்ப்பத்தில் விலை ஏறுவதற்கு வாய்ப்பு, எந்த சந்தர்ப்பத்தில் விலை இறங்குவதற்கு வாய்ப்பு (வாய்ப்பு என்று தான் சொல்கிறேன், பங்கு சந்தையில் எந்த விஷயத்தையும் உறுதியாக சொல்ல முடியாது) என்பது பற்றி எல்லாம் ஓரளவு தெரிந்து கொண்டோம். இது மட்டுமின்றி, chart எந்த அளவு முக்கியம் என்பதை நான் கொடுக்கும் உதாரண chart மூலமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் ஸ்டாப் லாஸ் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயத்தை பாப்போம். நான் சென்ற பதிவில் கூறியது போல ஒரு பங்கு வர்த்தகமாகும் நாள் எந்த விலையில் ஆரம்பித்தது (காலையில் முதல் வர்த்தகத்தின் விலை - Open), அன்றைய நாளில் எவ்வளவு அதிக விலைக்கு விற்றிருக்கிறது (Day High ), அன்றைய நாளில் வர்த்தகமாகிய குறைந்த விலை என்ன (Day Low ), அடுத்து அன்றைய நாளில் என்ன விலையில் கடைசியாக வர்த்தகம் ஆகி இருக்கிறது (Day Close ), என்பது ரொம்ப முக்கியம். பொதுவாக பங்கு சந்தை பற்றி நீங்கள் காணும் விஷயங்கள் அனைத்திலும் கண்டிப்பாக chart படம் போட்டிருக்கும். ஏனென்றால், chart இல்லாமல் பங்கு வணிகம் என்பது முடியாத விஷயம். நாம் என்னதான் ஒரு பங்கின் கடந்த கால விலையை பட்டியல் போட்டு பார்த்தாலும், ஒரு chart -ஐ பார்த்தோமென்றால் அனைத்தும் நேரடியாக ஒரு விஷுவலாக பார்த்து புரிந்து கொள்ளலாம். சரி விஷுவலா பார்க்கலாம், அதிலிருந்து என்ன புரிந்துகொள்ள முடியும்? அதை ஒரு வரியில் சொல்லிவிட முடியுமா என்றால்...இல்லை, அவ்வளவு சிம்பிளா சொல்ற விஷயமில்லை அது, ஆனால் சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல், மீண்டும் மீண்டும் chart -ஐ பார்க்கும் போது அதில் ஒரு புரிதல் கிடைக்கும். ஒரே chart -ஐ ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால், உங்களுக்கு வேறு மாதிரி தெரியலாம், வேறு சில விஷயங்கள் புரியலாம். எவ்வளவுதான் அனுபவ பட்ட Chart -Reader ஆக இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டு கவனிக்கும் போது இன்னும் புரியவரும். அதனால் chart-ஐ கவனித்து முடிவெடுக்கும் முன், chart எத்தனை விதம், அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை எல்லாம் தெரிந்து கொள்வோம்.

Chart -இல் எத்தனையோ விதம் இருந்தாலும், நாம் பங்கு வர்த்தகத்திற்கு கவனிக்க போவது இரண்டு Chart மட்டுமே. ஒன்று Line Chart இன்னொன்று Candle Stick Chart . கீழே இரண்டு Chart கொடுத்திருக்கிறேன், முதலில் உள்ளது Line Chart இரண்டாவது Candle Stick Chart .






மேலே கொடுத்திருக்கும் இரண்டு Chart -ம் ஒரே பங்குக்கு உள்ளதுதான். line Chart ஒவ்வொரு நாளும் பங்கு என்ன விலையில் முடிகிறதோ (Close) அதை வைத்து உருவாக்கப்பட்டது. Candle Stick Chart , ஒரு நாள் ஆரம்பித்த விலை, அதிக விலை, குறைந்த விலை, முடிவு விலை (Open , High , Low , Close) இவைகளை வைத்து உருவாக்க பட்டது. இன்று இதுவரை போதும், மேலும் அடுத்த பதிவில் பாப்போம்.

(Swing Trading என்பது தொடராக வருகிறது. இந்த பதிவை மட்டும் படிப்பவர்களுக்கு இது புரியாதது போல் இருக்கலாம். அதனால் தொடரை முதலில் இருந்து படித்து பாருங்கள், புரியும்.)

Sunday, March 13, 2011

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 5)

இதுவரை வந்த பதிவுகளில், பங்கு வர்த்தகத்தில் திட்டமிடுதல், Empty Zone பற்றி பார்த்தோம். சென்ற பதிவில் பங்குகள் வர்த்தகமாகும் எண்ணிக்கை (Volume), பங்கு வர்த்தகத்திற்கு Volume எவ்வளவு முக்கியம் என்பதை பார்த்தோம். நாம் ஏற்கனவே எழுதியது போல், அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை நாம் வர்த்தகம் செய்தால் வர்த்தகம் எளிதாகவும், லாபத்தில் இருக்கும் போது பங்கை விற்று லாபத்தை காசாக்குவதும் எளிதாக இருக்கும். அதற்காக அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்துமே லாபம் தரும் என்றோ, குறைந்த எண்ணிகையில் வர்த்தகமாகும் பங்குகள் எல்லாமே லாபம் எதுவுமே தருவதில்லை என்றோ முடிவு செய்து விடக்கூடாது.

ஒரு பங்கு தினசரி எவ்வளவு வர்த்தகம் ஆகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? சந்தையில் எத்தனையோ பங்குகள் வர்த்தகம் ஆகிறது. பங்கு வர்த்தகமாகும் எண்ணிக்கை மட்டுமல்ல, பங்கின் விலை கடந்த காலங்களில் எப்படி இருக்கிறது, அதனுடைய விலை ஏற்ற இறக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் கவனித்துதான் பங்குகளை வாங்கவேண்டும். இதையெல்லாம் எப்படி கவனிப்பது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் தொடர்பான வலைத்தங்களை பார்த்தோமானால் அதில் தினமும் பங்கு சந்தை முடிந்த பிறகு அன்றைய தினத்தில் அதிகமாக வர்த்தகமான பங்குகளை பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக கீழே உள்ள வலைத்தளங்களை சொல்லலாம்.

http://www.moneycontrol.com/
http://economictimes.indiatimes.com/

இது மட்டுமில்லாமல், பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்களை பார்க்க இந்த வலைத்தளங்களில் Chart -ம் இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்த வலைத்தளங்களை தகவல்களுக்காக மட்டுமே பயன் படுத்திக்கொண்டு, நான் ஏற்கனவே கூறியது போல www.chartnexus.com -இல், இலவசமாக Software download செய்து நமது கணினியில் chart -ஐ instal செய்து கொள்வது நல்லது. இந்த software , தினமும் அனைத்து பங்குகளின் விலை மற்றும் வர்த்தகமான பங்குகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை download செய்து கொள்ளும். நாம் இதற்கென்று தனியாக ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. நான் இந்த வலைத்தளத்தில் பயன் படுத்தும் chart அனைத்துமே www.chartnexus.com software மூலமாக உருவாக்கப்பட்டதுதான். அதனால் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் chart முக்கியம். அதை உங்கள் கணினியில் instal செய்துவிடுங்கள்.

நிறைய வர்த்தகமாகும் பங்குகளை மட்டுமே நாமும் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று சொல்கிறோமே, அதை எப்போது வாங்க வேண்டும் என்பதும், எப்போது விற்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது? ஒரு பங்கின் விலை கூடும் முன் அந்த பங்கின் Volume கூட ஆரம்பிக்கும். அதனால் volume கூடும் பங்குகளை கவனிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் volume அதிகரித்து அந்த பங்கின் விலை அன்றைய தினம் கலையில் முதல் வர்த்தகமாகும் விலையை விட அதிகமாக இருந்தால் இந்த பங்கின் விலை கூடும் என்று கணிக்கலாம். வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதில் volume முக்கியமானது. அடுத்து அன்றைய தினத்தின் ஆரம்ப விலை (Open), அன்றைய தினத்தின் அதிக விலை (High) அன்றைய தினத்தின் குறைந்த விலை (Low) அடுத்து அன்றைய தினம் பங்கு என்ன விலையில் முடிகிறது (Close) போன்றவற்றை கவனிக்க வேண்டும். சில நாட்களில் சில பங்கின் விலை Open விலையை விட கீழே போய் இருக்காது (Open =Low ). நாம் தின வர்த்தகத்தை பற்றி இதில் பேசவில்லை. Swing Trade என்பது ஒரு பங்கை வாங்கி மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்திருந்து அப்புறம் விற்பதை பற்றியது. ஆக பங்கின் விலை Open-ஐ விட மேலே இருந்து நல்ல volume இருந்தால் அதாவது முந்தைய நாளை விட அதிக volume வர்த்தகமாகி இருந்தால், அந்த பங்கை வாங்குவதில் ஆர்வம் (Buying Interest ) இருக்கிறது என்று அர்த்தம். அதனால் அப்படிப்பட்ட பங்குகளை வாங்குவது நல்லது. மேலும், வாங்கும் முன் அந்த பங்கின் Daily chart -ஐ ஒருமுறை கவனிக்க வேண்டும். கீழே உள்ளது அப்போலோ டயர்ஸ் பங்கின் chart. volume கூடினால் பங்கின் விலை கூடுவதை கவனியுங்கள்.



இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வர்த்தக எண்ணிக்கை கூடியதும் கண்டிப்பாக பங்கின் விலை கூடும் என்று முடிவு செய்து விடக்கூடாது. பங்கின் விலை விழும்போதும், volume கூடத்தான் செய்யும். சரி விலை கூடினாலும் volume கூடுகிறது, விலை குறைந்தாலும் volume கூடுகிறதே, நாம் எப்படி வர்த்தகம் செய்வது என்ற ஒரு கேள்வி வரலாம். ஒரு பங்கின் volume கூடும் போது அதன் விலை கூட ஆரம்பிகிறது என்றால் அந்த பங்கு ஏறுமுகத்தில் இருக்கிறது என்று முடிவு செய்யலாம். விலை ஏற ஆரம்பித்த முதல் நாள் வாங்க முடியாவிட்டாலும், அந்த பங்கை நன்றாக follow செய்து அடுத்த நாள் அதாவது விலை ஏற ஆரம்பித்த இரண்டாவது நாள் வாங்கலாம். மேலும், பங்கின் volume அதிகமாகும் போது அந்த பங்கின் விலை என்ன நிலையில் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பங்கின் விலை ஓரளவு கீழே இருந்து, volume அதிகமாகி விலையும் கூடுகிறது என்றால், இது வாங்கும் நேரம் என்பதை முடிவு செய்யலாம். அதே பங்கின் விலை கிட்டத்தட்ட மேலே இருக்கும்போது, அதாவது முந்தைய அதிகபட்ச விலை அருகே வந்து அப்பொழுது volume அதிகமாகி விலை குறைய ஆரம்பித்தால் அது வாங்கும் தருணமல்ல விற்கும் தருணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுசரி பங்கின் விலை ஏன் இபப்டி அடிக்கடி ஏறி இறங்கி, அதுவும் நல்ல volume -இல் ஏறுகிறது, அதைப்போல volume அதிகமாகி குறைகிறதே காரணம் என்ன?

சில தகவல்களை வைத்து, பெரிய வர்த்தகர்கள் அல்லது Professional traders பங்குகளை அதன் விலை கீழே இருக்கும்போது வாங்க ஆரம்பிக்கிறார்கள் அதனால் பங்கின் volume கூடுகிறது, Demand இருப்பதால் volume அதிகமாகி விலையும் கூடுகிறது. இபப்டி professional traders வாங்கி விலை கூடுவதை பார்த்து சிறு முதலீட்டளர்கள் மூன்று அலல்து நான்கு நாள் கழித்து அதை கவனித்து வாங்க ஆரம்பிக்கிறார்கள். அப்படி சிறு முதலீட்டளர்கள் வாங்க ஆரம்பிக்கும் போது ஏற்கனவே வாங்கியிருந்த பெரிய வர்த்தகர்கள் விற்க ஆரம்பிப்பார்கள். இந்த சூழ்நிலையில் விலை அதிக ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரு நிலையிலேயே இருக்கும். இதைத்தான் நாம் empty zone என்று சொல்கிறோம். என்னடா இது நாம் பங்கை வாங்கி நாள் ஆகிறதே இன்னும் விலை கூடவில்லையே என்று சிறு வர்த்தகர்கள் கிடைத்த லாபத்திற்கு விற்க ஆரம்பிப்பார்கள். அப்படி விற்க ஆரம்பிக்கும் போது, விலை குறைய ஆரம்பிக்கும். இதனால் விலை குறைகிறதே என்று பயந்து பங்குகளை வைத்திருக்கும் மற்ற சிறு வர்த்தகர்கள் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு போட்ட பணத்தை சிறு லாபத்தில் அல்லது நஷ்டத்தில் விற்று விட்டு வெளியேறும் போது மீண்டும் volume கூடுகிறது. ஆக பெரிய வர்த்தகர்கள் வாங்கும் போது volume கூடி விலை கூடுகிறது. சிறு வர்த்தகர்கள் வாங்க ஆரம்பிக்கும் போது பெரியவர்த்தகர்கள் விற்று விட்டு வெளியே போய் விடுகிறார்கள். அதன் பின் சிறு வர்த்தகர்கள் கிடைத்த விலைக்கு விற்பதால் மீண்டும் volume கூடுகிறது அனால் விலை குறைகிறது. இதுதான் விலைக்கும் volume-க்கும் உள்ள உறவு. கீழே உள்ள chart -ஐ பாருங்கள் ஓரளவு இந்த விஷயங்கள் புரியும்.



அதனால் ஒரு பங்கின் volume கூடும் போது, பங்கின் விலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை கவனித்து வாங்க வேண்டும். இதற்கு chart -ஐ கண்டிப்பாக பார்க்க வேண்டும். அப்படி கவனித்தால் மட்டுமே பங்கின் விலை இப்போது எங்கே இருக்கிறது, பங்குகளை வாங்க இது சரியான நேரமா என்பதை எல்லாம் முடிவு செய்ய முடியும். பங்கின் விலை ஏற ஆரம்பிக்கும் போதே வாங்கி விட வேண்டும். நாம் பங்குகளை வாங்கும் விலையை Entry Level என்று சொல்கிறோம். சரியான Entry Level , போதுமென்ற மனதுடன் ஓரளவு லாபம் வந்ததும் விற்று விட்டு வெளியேறுவது என்னும் விஷயத்தில் கவனமாக இருந்தால், பங்கு சந்தையில் லாபம் பார்க்கலாம்.

அடுத்த பதிவில் வேறு சில விஷயங்களை பார்ப்போம்.

Wednesday, January 6, 2010

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 4)

சென்ற பதிவில் திட்டமிடுதல் பற்றி பார்த்தோம், மேலும் பங்கு வர்த்தகத்தில் Volume பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் Volume பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், ஒரு பங்கு விலை கூடும் முன் அதனுடைய Volume கூடும். Volume என்றால் தினசரி சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் மொத்த எண்ணிக்கை. பங்கு வர்த்தகத்தில் Volume ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் நல்ல Volume -இல் வர்த்தகமாகும் பங்குகளை வாங்கினால் லாபம் இருக்கும் போது விற்று காசாக்குவது எளிதாக இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை வாங்கினோம் என்றால் அதை விற்பது கஷ்டமாக இருக்கும். எந்த ஒரு பங்குமே வர்த்தகமாகும் போது வாங்குபவர் ஒரு விலைக்கு கேட்பார் (Bid Price ), விற்பவர் அதைவிட கொஞ்சம் விலை கூட்டி கேட்பார் (Offer Price ). இந்த மாதிரி சூழ்நிலையில், சிலர் பங்குகளை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் விற்பவர் கேட்கும் விலைக்கு ஆர்டர் செய்து பங்குகளை வாங்கிக்கொள்ளுவார் அல்லது ஒருவர் கண்டிப்பாக பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்தார் என்றால், வாங்குபவர் கேட்கும் விலைக்கு ஆர்டர் அனுப்பி தன்னிடம் இருக்கும் பங்குகளை விற்று விடுவார். ஆக வாங்குபவருக்கும் விற்பவருக்கும் ஒருவித Balance வரும்போது தான் வர்த்தகம் நடக்கும். ஒரு பங்கு Uptrend -இல் இருந்தால் விற்பவர் சொல்லும் விலைக்கு வாங்கிக்கொள்ளுவார்கள், ஏனென்றால் விலை இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில், கொஞ்சம் அதிகம் கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வாங்குபவருக்கு இருக்கும், அதனால் கிடைக்கும் விலைக்கு வாங்கிக்கொள்ளுவார்கள். ஆக பங்கு உயரும் நிலையில் இருக்கும்போது விற்பவர் விலை நிர்ணயிக்கிறார். இதுவே ஒரு பங்கு Down Trend -இல் இருந்தால் நேர்மாறாக இருக்கும். வாங்குபவர்கள் அடிமாட்டு விலைக்கு பங்குகளை கேட்பார்கள் - அதாவது Down Trend -இல் இருக்கும் போது வாங்குபவர் கை ஓங்கி இருக்கும். சரி இதற்கும் Volume -கும் என்ன சம்மந்தம் என்று கேட்க தோன்றும். நல்ல எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகும் பங்குகளை விற்பவரும் சரி வாங்குபவரும் சரி அதிக வித்தியாசத்தில் கேட்க முடியாது, ஏனென்றால் அதிக எண்ணிக்கையில் பங்கு வர்த்தகமாவதால், விற்பவர் அதிக விலைக்கு Offer Price கேட்கிறார் என்றால், வேறொரு விற்கும் நபர் அதைவிட கொஞ்சம் குறைவில் Offer கொடுப்பார். அதனால் Bid -கும் Offer -கும் அதிக வித்தியாசம் அதிகம் இருக்காது, வர்த்தகம் எளிதாக இருக்கும். எளிது என்றால் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்று விடுவது எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு பங்கு நூறு ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது என்றால், அதிக Volume இல்லாத பங்குகளின் அடுத்த பிட் தொண்ணூற்று ஐந்து ரூபாயா இருக்கலாம் Offer நூற்றி மூன்று ரூபாயாக இருக்கலாம். இந்த நிலையில் நம்மிடம் பங்குகள் இருக்கிறது என்றால் நாம் ஏற்கனவே வர்த்தகமாகி இருக்கும் நூறு ரூபாய்க்கு நம்முடைய பங்கை விற்பது மிக கடினமான காரியமாக இருக்கலாம் அல்லது சில நேரம் வேறு வழி இல்லாமல் தொண்ணூற்று ஐந்து ரூபாய்க்கே விற்க வேண்டிய சூழ்நிலை வரலாம். இதுவே அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகும் பங்குகள் என்றால் ஏற்கனவே வர்த்தகமான விலையை விட ஐந்து அல்லது பத்து பைசா வித்தியாசத்தில் அடுத்த வர்த்தகம் செய்துவிட முடியும். அதனால் நிறைய வர்த்தகம் ஆகும் பங்குகளில் வர்த்தகம் செய்வது நல்லது. எளிதாக வர்த்தகம் செய்ய முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்கை வாங்கவோ விற்கவோ ஆர்டர் செய்துவிட்டு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் நாம் வேறு எந்த பங்கிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது மட்டுமல்லாமல் அதே பங்கை நல்லை விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாமல் போகலாம். பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும் போது Time is Money என்று சொல்லுவது போல், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், கொஞ்சம் கவனிக்காமல் இருந்தால் பங்கின் விலையில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு, அது நமக்கு சாதகமாக இருந்தால் நல்லது, பாதகமானால் நஷ்டம் அதிகமாக இருக்கும். அதனால் எப்போது பங்கை வாங்கினாலும் விற்றாலும் Limit order -இல் தான் வர்த்தகம் செய்ய வேண்டும். Limit order என்றல், நாம் ஒரு பங்கை வாங்கும் போது நாம் கேட்கும் விலையை குறிப்பிட்டு order செய்ய வேண்டும். இப்படி Limit Order இல்லை என்றால், நாம் பங்குகளை வாங்கும் போது அதிக Bid Price என்ன விலையில் இருக்கிறதோ அந்த விலையில் நமக்கு பங்கு கிடைக்கும், இதுவே Limit Order இல்லாமல் விற்கிறோம் என்றால் இருப்பதிலேயே மிக குறைந்த Bid Price இல் தான் நமக்கு விற்பனை ஆகும். எனவே Limit Order என்பது முக்கியம். நாம் விலை குறிப்பிடாமல் செய்யும் Order -ஐ Market Order என்று சொல்கிறோம்.

இது மட்டுமில்லாமல், அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகாத பங்குகளில் உள்ள இன்னொரு Risk என்னவென்றால், திடீரென பங்கின் விலை குறைந்தால் (உதாரணம்: துபாய் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்ற செய்து வந்த வெள்ளிக்கிழமை, பங்குச்சந்தை தலை கீழாக விழுந்தது நினைவிருக்கலாம்) நம்மிடம் இருக்கும் பங்குகளை நாம் நினைக்கும் விலைக்கு விற்க முடியாது, அதனால் நஷ்டத்தை குறைக்க கிடைக்கும் விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை வரும் - நஷ்டம் அதிகமாக இருக்கும். ஆக ஒரு நாளைக்கு எத்தனை பங்கு விற்பனை ஆகிறது (Volume ) என்னும் விஷயம் எவ்வளவு முக்கியம் என்று மேலே கூறிய காரணங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இனி Volume எப்படி விலை உயர்வை அல்லது விலை குறைவதை நமக்கு உணர்த்தும் என்பதை இனி பார்ப்போம்.

பொதுவாக ஒரு பங்கு விலை கூடும் என்ற எதிர்பார்ப்பு வந்ததுமே அனைவரும் அந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் பங்கு சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கையும், வாங்குவதற்காக கேட்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையும் (Bid Quantity) கூடும். அதாவது சந்தையில் குறிப்பிட்ட அந்த பங்கின் Demand கூடும். எந்த ஒரு பொருளுக்குமே Demand கூடினால், விற்பவர் விலையை கூட்ட ஆரம்பிப்பார் அதனால் அந்த பொருளின் விலை கண்டிப்பாக உயரும் - இது பங்கு சந்திக்கும் பொருந்தும், காய்கறி சந்திக்கும் பொருந்தும். பங்கு சந்தை-ஐ பொறுத்த வரை, முதலில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை கூடும் போது விலை கொஞ்சம் உயர ஆரம்பிக்கும், அடுத்து தொடர்ந்து வாங்குபவர்களின் ஆர்வம் கூடுவதால் விற்பவர் கையில் சந்தையின் பிடி இருக்கும் - அதாவது விலையை கூட்டுவார்கள், விலை கூடினாலும், அந்த பங்கின் மேல் இருக்கும் ஆர்வத்தால், வாங்குபவர்களும் ஓரளவு அதிக விலைக்கே வாங்குவார்கள், இதனால் தொடர்ந்து பங்கின் விலை மூன்று முதல் ஐந்து நாட்கள் குறைந்த பட்சமாக கூடும். நாம் இந்த சூழ்நிலையை கவனிக்க வேண்டும், கூட ஆரம்பிக்கும் போது வாங்கி, ஓரளவு லாபம் வந்ததும் விற்றுவிட்டு வெளியேறி விடவேண்டும். இதற்கு நாம் விற்பனை இலக்கு வைத்திருக்க வேண்டும். அது வாங்கிய விலையில் இருந்து 5 % ஆக இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட விலை உயர்வாக இருக்கலாம், எப்படி இருந்தாலும், இலக்கு வைத்து வர்த்தகம் பண்ண வேண்டும். இலக்கை எட்டியது விற்றுவிட வேண்டும், இப்படி செய்தால் மட்டுமே வர்த்தகத்தில் லாபம் பார்க்க முடியும். இப்படி செய்யாமல் விலை கூடுகிறது என்று வைத்துக்கொண்டிருந்தால், விலை கூடும் போதும் நாம் பார்த்துக்கொண்டே இருப்போம், அதே போல் விலை அடுத்து வரும் நாட்களில் கீழே வரும்போதும் பார்த்துக்கொண்டே இருப்போம். இப்படி பார்துக்கொண்டிருக்கவா வர்த்தகம் செய்கிறோம்? பங்குகளை வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் வாங்கிய பங்குகளை சரியான நேரத்தில் விற்பது. நிறைய பேர் வாங்கும்போது காட்டும் அக்கறையை விற்கும்போது காட்டுவதில்லை. அதனால் லாபம் என்பது கைக்கு வராமல் போகிறது.

இந்த பதிவில் Volume பற்றி ஓரளவு பார்த்திருக்கிறோம், Volume சம்மந்தமான முக்கியமான விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பின் குறிப்பு : சென்ற பதிவில் நாம் குறிப்பிட்டிருந்த Jaiprakash Hydropower பங்கின் விலை இப்போது எவ்வளவு என்று கவனித்தீர்களா????

Sunday, January 3, 2010

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 3)

PLAN A TRADE, TRADE THE PLAN

திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கு பற்றி பார்த்தோம். லாப இலக்கு பற்றி முடிவு செய்யும் முன் பங்குகளில் ஏற்ற இறக்தத்தை பற்றி தெரிந்து கொள்ளுவது நல்லது. பொதுவாக எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதுமில்லை தொடர்ந்து இறங்கிக்கொண்டே இருப்பதுமில்லை. விதிவிலக்காக ஏதாவது செய்தியின் அடிப்படையில் தொடர்ந்து ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கலாம். ஒரு பங்கு குறைந்தபட்சமாக 3 முதல் 5 நாள் ஏற்றத்தில் இருக்கும் அதேமாதிரி இறக்கத்திலும் இருக்கும். வர்த்தகம் செய்யும் போது அந்த 3 முதல் 5 நாட்களில் லாபத்தை சம்பாதிக்க வேண்டும். இதெல்லாம் நல்லாத்தான் இருக்குது - ஆனா எப்போ ஏறும் எப்போ இறங்கும் என்பது எப்படி தெரியும்? இது விஷயமாக வரும் பதிவுகளில் பார்க்கலாம். அதற்கு முன் திட்டமிடுதலை பார்ப்போம். லாப இலக்கு என்பது குறிப்பிட்ட சதவீதமாக இருக்கலாம் (ஒரு நாளைக்கு ௨% அல்லது பங்கின் Resistance -ஐ அடிப்படையாக வைத்து லாப இலக்கு நிர்ணயிக்கலாம்). லாப இலக்கு இல்லாமல் வர்த்தகம் என்பது கண்ணை கட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்வது போல. ஒரு வேலை பத்திரமாக கரை சேரலாம் அல்லது காட்டுக்குள்ளே தொலைந்தே போகலாம்... எனவே லாப இலக்கு அத்தியாவசியம்.

இனி திட்டமிடுதலில் அடுத்து பார்க்க வேண்டியது "சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்" என்பது. நாம் எவ்வளவுதான் கவனமாக பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கினாலும், திடீரென ஏதாவது ஒரு செய்தியை வைத்து பங்குகளின் விலை தற்காலிகமாக குறைய வைப்பு உண்டு. அந்த மாதிரி நேரத்தில், நம்முடைய சொந்த பணம் என்றால், பங்கின் விலை ஏறும் வரை பங்குகளை வைத்து கொண்டிருக்கலாம், இதுவே கடன் வாங்கிய பணம் என்றால் திருப்பி செலுத்த வேண்டுமே என்னும் பிரச்சினையினால் நஷ்டத்திற்கு பங்குகளை விற்க வேண்டுய சூழலுக்கு நாம் தள்ளப்படலாம், அதனால் என்றுமே சொந்த பணத்தில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, "குறைந்த பணத்தில் வர்த்தகம் ஆரம்பிக்க வேண்டும்". ஏனென்றால், அனுபவம்தான் ஆசான் என்று சொல்வதுபோல், நாம் நம்மால் தாங்க முடிந்த நஷ்டத்தின் அளவில் குறைந்த பணத்தில் வர்த்தகம் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகத்தின் அளவை கூட்டலாம். இதை ஏன் சொல்கிறேன் என்தால் ஒருவேளை நம்முடைய வர்த்தகம் நாம் நினைத்த மாதிரி லாபத்திற்கு வரவில்லை என்றால், நஷ்டம் நம்மால் தாங்க முடியும் அளவில் இருக்கும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், "பங்குகளை வர்த்தகம் செய்யுங்கள், காதல் கொள்ளாதீர்கள்". எந்த பங்குமே எப்பொழுதுமே கூடிக்கொண்டே இருப்பதில்லை. அதனால் ஒரு பங்கில் ஓரளவு லாபம் பார்த்த பின், அடுத்த முறை வாங்கும்போது இது இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பதை கவனித்துதான் வாங்க வேண்டும். எனக்கு இந்த நிறுவனம் பிடிக்கும், இது நல்ல நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு வர்தகதிர்க்காக மீண்டும் மீண்டும் வாங்குவது சரியல்ல, இதனால் நீங்கள் போட்ட பணம் அந்த பங்கில் முடங்கிப்போக வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் அடிப்படையே, அடிக்கடி வாங்கி விற்றுக்கொண்டிருக்க வேண்டும். நல்ல நிறுவனமாக இருக்கலாம், அனால் குறுகிய காலத்தில் அது லாபம் தரக்கூடியதாக இருக்காது. நீண்ட காலத்தில் நல்ல பண்ணுகள் அனைத்துமே குறிகிய கால வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே எனக்கு இந்த பங்கு பிடிக்கும் என்று எந்த ஒரு பங்கையும் காதல் கொள்ளாதீர்கள்.

"அடுத்த நாள் வர்த்தகத்திற்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்". தினமும் சந்தை முடிந்ததும் அடுத்தநாள் எந்தெந்த பங்குகளை வர்த்தகம் செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் பங்குகளில் எதை விற்கலாம், விற்ற பணத்தில் வேறு எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை Select செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சந்தை நடக்கும் போது திடீரென்று நான் இந்த பங்கை வாங்கபோகிறேன் என்று முடிவு எடுப்பது அனேகமாக சரியாக இருப்பதில்லை. எப்படி தேர்ந்தெடுப்பது என்பது வரும் பதிவுகளில் பாப்போம்.

"அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்". பங்கு பரிந்துரை செய்வதற்கென்றே நிறைய வலைத்தளங்கள் இருக்கிறது. மாதம் இவ்வளவு பணம் காட்டுங்கள் நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று நிறைய தளங்கள் சொல்கின்றன. பரிந்துரைகளை கண்மூடித்தனமாக Follow பண்ணுவது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். அடுத்தவர்கள் சொல்லும் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளுங்கள், அதை அப்படியே செயல்படுத்தாமல் நீங்கள் அந்த பங்கின் Chart -ஐ பார்த்து நீங்களே முடிவு செய்து வர்த்தகம் செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ உங்களது செயல்பாட்டுக்கு நீங்களே பொறுப்பு என்ற மனப்பான்மையை முதலில் இருந்தே வளர்த்துக்கொள்ளுங்கள். நஷ்டமடைந்தால் அடுத்தவர் மீது பழி போடுவதில் எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பணம் உங்களுடையது, அதை பாதுக்காக்க வேண்டியதும், பன்மடங்காக பெருக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு. அடுத்தவரை குறை கூறினால் நாம் இழந்த பணம் திரும்ப வரப்போகிறதா???

"லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள்". வர்த்தகத்தில் லாபம் நஷ்டம் என்பது இல்லை, Winning Trade அல்லது Losing Trade என்ற இரண்டு மட்டும் தான் உண்டு. வெற்றி தோல்வி மட்டுமே குறிக்கோள். நாம் நிர்ணயித்த லாபம் வந்தால் அது வெற்றி, ஒரு வேளை நாம் நினைத்த மாதிரி பங்கின் விலை கூடாமல், இறங்க ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட அளவு நஷ்டத்தில் விற்றுவிடுவது நல்லது. இதை Stop Loss என்று சொல்கிறோம். பங்கின் விலை ஏறும் என்று நினைத்து மேலும் மேலும் விலை இறங்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை விட, இறங்குகிறது என்று தெரிந்ததும், விற்று கொஞ்சம் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதனால் இரண்டு வித பலன் உண்டு. முதலில் அதிக நஷ்டத்தை தவிர்த்துவிடலாம், இன்னொன்று விற்று வந்த பணத்தை வைத்து அடுத்த பங்கை வாங்கி இழந்த லாபத்தை சரி கட்டி விடலாம். எனவே ஸ்டாப் லாஸ் என்பது அத்தியாவசியமானது.

ஒரு பங்கை வாங்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டால், உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதை வாங்க வேண்டும். உங்களுடைய Analysis -இல் உங்களுக்கு முழு திருப்தி இல்லை என்றால், அந்த பங்கை வாங்காமல் வேறு பங்குகளை கவனியுங்கள்.

நீங்கள் செய்யும் வர்த்தகத்தை தினமும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் (Record Keeping). இது ஏனென்றால், நேரம் கிடைக்கும்போது நாம் ஏற்கனவே செய்த வர்த்தகங்களை ஒரு Review செய்து பார்ப்பது நல்லது. அப்படி பார்க்கும் போது, நாம் லாபம் சம்பாதித்த பங்குகளுக்கும் நஷ்டமடைந்த பங்குகளுக்கும் Technical Indicators -இல் என்னென்ன வித்தியாசம் இருந்தது, நாம் எங்கே தவறு செய்தோம் போன்றவை நமக்கு புரியும். இது மிகமிக அத்தியாவசியமானது. எனவே, உங்களுடைய வர்த்தகத்திற்கான Record உங்களிடம் இருக்கவேண்டும். ரொம்ப எளிதான விஷயம் இது. பங்கு வாங்கிய மற்றும் விற்ற தேதி, பங்குகளின் எண்ணிக்கை, வாங்கியவிலை, விற்றவிலை, Brokers Commission , லாப-நஷ்டம் போன்ற விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

திட்டமிடுதலில் கடைசியாக கவனிக்க வேண்டியது, பண நிர்வாகம் (Money Management). இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் ஸ்டாப் லாஸ். அதிக நஷ்டத்தை தவிர்பதற்காக பங்கின் விலை குறைகிறது என்று தெரிந்ததும், ஒரு குறிப்பிட்ட நஷ்டத்தில் பங்கை விற்று, அதிக நஷ்டத்தை தவிர்ப்பது - இது பற்றி ஏற்கனவே பதுவிட்டோம். Stop Loss -ஐ அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, சில நேரம் நாம் வாங்கிய பங்கு, விலை கூடவும் செய்யாமல், குறையவும் செய்யாமல் ஒருவித Flat -ஆக இருக்கும். இதை ஆங்கிலத்தில் Empty Zone என்று சொல்லுவார்கள். இந்த மாதிரி எம்ப்டி ஜோன்-இல் இருக்கும் ஒரு பங்கை நாம் விற்றால் லாபமும் இருக்காது அதே நேரம் அதிக நஷ்டமும் இருக்காது. அதாவது பங்கின் விலை நம்முடைய லாப இலக்கிற்கும் வரவில்லை, Stop Loss அளவையும் தொடவில்லை. இந்த மாதிரி Empty Zone (EZ ) -இல் இருக்கும் பங்கு சந்தையின் போக்கை அடுத்து, திடீரென விலை கூடலாம் அல்லது விலை வேகமாக குறையவும் செய்யலாம். அதனால் EZ -இல் இருக்கும் பங்கை முடிந்தவரை விற்று நம்முடைய முதலை கையில் எடுத்துவிடுவது நல்லது. கீழே இருக்கும் chart-ஐ பாருங்கள், இது Jaiprakash Hydropower பங்கின் தற்போதைய Chart. கண்டிப்பாக இது EZ -இல் இருக்கிறது. இந்த பங்கு Rs .76 /-ஐ தாண்டினால் வாங்கலாம் அல்லது Rs .72 /-ஐ விட குறைந்தால் Down Trend என்று முடிவு செய்யலாம், அதுவரை இந்த பங்கில் வர்த்தகம் என்பது கவனமாக இருக்க வேண்டும். EZ -ஐ ஒரு பங்கு நல்ல Volume (தினம் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை) உடன் தாண்டினால், பங்கின் விலை கூடும், EZ -ஐ தாண்டுகிறது என்று அர்த்தம், அபப்டி இல்லாமல் வழக்கமான Volume இருந்தால், பங்கின் விலை கூடும் என்று சொல்ல முடியாது, மீண்டும் EZ -இல் இருக்க வாயப்பு உண்டு. (கீழே இருக்கும் chart -இன் கீழ்பகுதியில் இருக்கும் Histogram தான் தினசரி Volume). Empty Zone-இல் ஒரு பங்கின் விலை எப்படி இருக்கிறது என்பதை கீழே இருக்கும் Chart -இல் பார்க்கலாம்.




ஏற்கனவே பார்த்தது போல் EZ-இல் ஒரு பங்கு நமக்கு அதிக லாபமும் தராது, அதிக நஷ்டமும் தராது, இந்த சூழ்நிலையில், அந்த பங்கை விற்றுவிட்டு, அடுத்த பங்கை பார்ப்பது நல்லது. இனி பங்கின் விலைக்கும் Volume -கும் என்ன தொடர்பு, அது எப்படி ஒரு பங்கை வாங்குவது அலல்து விற்பதற்கு பயன்படும் என்பதை அடுத்த பதிவில் பாப்போம்.

Thursday, September 24, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 2)

PLAN A TRADE, TRADE THE PLAN


சென்ற பதிவில் Swing Trading என்றால் என்ன என்று பார்த்தோம். இந்த பதிவில் வர்த்தக திட்டம் பற்றி பார்ப்போம். ஏனென்றால் திட்டத்துடன் செயல் படும் மனிதனை விட திட்டமில்லாமல் செயல்படும் மனிதனின் தவறுகள் அதிகமாக இருக்கும் (இது பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்). திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல அந்த திட்டத்தின் படி கொஞ்சமும் தவறாமல் நடக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒரு Famous Quote உண்டு. plan a Trade , Trade the plan . எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், அப்புறம் அந்த முடிவுப்படியே வர்த்தகம் செய்ய வேண்டும் - அதிலிருந்து கொஞ்சமும் விலகக்கூடாது.அந்த அளவு மன உறுதியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனி திட்டமிடுதல் பற்றி பாப்போம். நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் வர்த்தகம் செய்வதற்கான பதிவில் நாம் இருக்கிறோம். வர்த்தகம் என்றால் ஒரு பங்கை வாங்கி 3 முதல் 5 நாட்களில் விற்பதற்கான வர்த்தக திட்டம். சில நேரங்களில் ஒரு நாளில் கூட விற்றுவிடும் சூழ்நிலை வரலாம். இந்த மிகமிக குறுகியகால வர்த்தகத்தை தான் Swing Trading என்கிறோம். அதனால் Swing Trading இல் Timing ரொம்ப முக்கியம். இதற்கு நாம் Trading Rules வரையறுத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. கீழ்க்கண்ட Trading Rules or Plan, Swing Trading -கு அவசியம்.

1. லாப இலக்கு (Targeted Profit)
2. சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்
3. குறைந்த அளவு பணத்தில் வர்த்தகத்தை ஆரம்பிக்க வேண்டும்
4. பங்கை வர்த்தகம் செய்யுங்கள் - காதல் கொள்ளாதீர்கள்
5. அடுத்த நாள் வர்த்தகத்துக்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்(Watchlist)
6. அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்
7. வர்த்தகத்துக்கு இடையே அவசர முடிவுகள் வேண்டாம்
8. லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள் (Stop Loss)
9. உறுதியான நம்பிக்கை இல்லை என்றால் வாங்காதீர்கள்
10.நீங்கள் செய்த வர்த்தகத்தை தினமும் குறித்துக்கொள்ளுங்கள் (Record Keeping)
11.நம்முடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது? (Managing your money)

இனி ஒவ்வொன்றாக கவனிப்போம்.

லாப இலக்கு (Targeted Profit)

பொதுவாக பங்குகளை வாங்கியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை - நான் வாங்கிய பின் இந்த பங்கு 10% லாபத்தில் இருந்தது, ப்ச் விற்காமல் விடுட்டுட்டேன், இப்போ 20% நஷ்டத்தில் இருக்கிறது என்பார்கள். இதற்கு என்ன காரணம்? இதே மாதிரி அனுபவங்கள் எனக்கும் நிறைய இருந்திருக்கிறது. அன்று விற்றிருக்கலாமே என்று இன்று நினைத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனால் நம்முடைய லாபத்திற்கு நாம் ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய பங்கு, நம்முடைய நிர்ணயிக்கப்பட்ட லாப இலக்கை அடைந்ததும் விற்றுவிட வேண்டும். இந்த பங்கு இன்னும் விலை கூடும் கூடும் என்று நினைத்து, விற்காமல் வைத்திருக்க கூடாது. ஒரு வேளை நாம் வைத்திருக்கும் பங்கு இன்னும் விலை கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், பாதி பங்குகளை நம்முடைய இலக்கில் விற்று விட்டு, மீதி இருப்பவற்றை அதிக லாபத்திற்காக வைத்திருக்கலாம். சில நேரம் நாம் விற்ற பங்குகள் விலை கூடலாம், அதற்காக வருத்தப்பட கூடாது. அதே பங்கு நாம் விற்றபின் விலை குறைந்தால் நாம் சந்தோஷ பாடுவோமே, அதைப்போல் விற்றபின் விலை கூடி விட்டதே என்று வருத்தப்பட கூடாது. நமக்கு நம்முடைய லாபம் வந்து விட்டது. போதும் என்று மன நிறைவாக அடுத்த வர்த்தகத்தை கவனிக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் கேட்டேன், எப்படி லாபத்தை புக் பண்ணுகிறீர்கள் என்று. அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, ஒரு பங்குக்கு ஐமபது ரூபாய் லாபம் வந்ததும் விற்று விடுவேன் என்றார். அவர் வாங்கும் பங்குகள் அனேகமாக அதிக விலை உள்ள பங்குகளாக இருக்கும், அவர் வர்த்தகத்திற்கு ஒதுக்கி இருக்கும் பணமும் அதிகம். அதனால் ஐமபது ருபாய் என்றால் ஒரு வர்த்தகத்தில் 5000 முதல் 10000 ரூபாய் வரை லாபம் பார்ப்பார். ஆக அவருக்கு ஒரு இலக்கு - ஐமபது ரூபாய் கூடினால் போதும் என்பது - அந்த ஐம்பது ருபாய் லாபம் ஒரு நாளில் வரலாம் அல்லது ஒரு வாரம் ஆகலாம். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு இலக்கு வைத்திருப்பார்கள். லாபத்தை ரூபாயில் நிர்ணயிப்பதை விட, சதவீதத்தில் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

நாம் Swing Trading செய்யும் போது, குறைந்த பட்ச லாபமாக ஒரு நாளைக்கு 2% அல்லது வாரத்திற்கு 5 முதல் 10 சதவீத லாபம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2% என்று இலக்கு நிர்ணயித்து கொண்டபின், சில நேரம் ஒரே நாளில் 5% கூடலாம், அல்லது நாம் 2% லாபத்தில் விற்ற பங்கு அடுத்த நாள் மேலும் 2% கூடலாம். ஒரு பங்கை விற்றுவிட்ட பிறகு, அது கூடுகிறதே என்று கவலைப்படுவதை விட, விற்று வந்த பணத்தில் விற்ற அன்றே அடுத்த பங்கில் முதலீடு செய்து விட வேண்டும். சில நேரங்களில் வாங்கிய அன்றே 2% லாபம் கிடைத்து விடும், விற்று விட்டு அடுத்த பங்கை வாங்குவது நல்லது அல்லது பாதியை விற்றுவிட்டு, மீதியை அடுத்த நாளுக்கு வைத்துக்கொள்ளலாம். சில பங்குகள் நாம் விற்ற பின் கூடிக்கொண்டிருந்தால், அந்த பங்கு இன்னும் கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், அதே பங்கை மீண்டும் வாங்கி விற்பதில் தவறு இல்லை. வாங்குவதற்கு முன், விலை உயர்வதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், தொடர்ந்து பதிவை பாருங்கள்.

ஒவ்வொருவரும் ஒரே பங்கில் நான் 50% லாபம் பார்த்தேன் என்று சொல்கிறார்களே, இங்கே நாம் 2% பற்றி பேசுகிறோமே, இதெல்லாம் ஒரு லாபமா என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். பலதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒரு நாளைக்கு 2% என்றால், சராசரியாக ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் பங்குச்சந்தை உண்டு. திட்டமிட்டபடியே லாபமீட்ட முடிந்தால் மாதத்திற்கு 40% லாபம் கிடைக்கும். நாம் செய்யும் அத்தனை வர்த்தகமும் லாபத்தில் முடியும் என்று சொல்ல முடியாது. சில பங்குகளை ஒரு சதவீத லாபத்தில் விற்க வேண்டியிருக்கலாம், சில பங்குகளில் ஒரே நாளில் 5% லாபம் கிடைக்கலாம், சில பங்குகளை நஷ்டத்தில் விற்க வேண்டியிருக்கலாம். அதனால் சராசரியாக பத்து வர்த்தகத்தில், ஏழு லாபத்தில் முடிந்தால் கூட, மாதத்தில் 20 நாட்கள் பங்குச்சந்தை உண்டு என்பதால், சராசரியாக மாதத்திற்கு 20% முதல் 25% லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 20% என்பது மிகப்பெரிய லாபம். நம்புங்கள் மாதத்திற்கு 20% என்பது என்னுடைய மிக குறைந்த மதிப்பீடு.

அதனால் திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். இந்த லாப இலக்கு என்பது Swing Trading -இல் மட்டுமில்லாமல் அனைத்து வர்த்தகத்திலும் அவசியமானது. மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, September 23, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 1)

இது பங்கு வர்த்தகம் பற்றிய புதிய தொடர். எந்த ஒரு பங்குமே தொடர்ந்து ஏறுவதும் இல்லை தொடர்ந்து இறங்குவதும் இல்லை. எந்த ஒரு பங்கை எடுத்துக்கொண்டாலும், சிலநாட்கள் ஏறுமுகமாகவும் சிலநாட்கள் இறங்குகுமுகமாகவும் தான் இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Chart-ஐ பாருங்கள். இதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை கவனியுங்கள். இந்த ஏற்ற இறக்கத்தில் லாபம் பார்ப்பதைத்தான் வர்த்தகம் என்கிறோம்.



சரி இந்த ஏற்ற இறக்கங்களை எப்படி நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்வது? நாம் மேலே பார்க்கும் Chart ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம். பங்குகள் ஏறிய பிறகு அதை பார்ப்பதால் உடனடியாக நாம் எந்த பலனும் அடைய முடியாதே. ஒரு பங்கு ஏறும் முன் அல்லது இறங்கும் முன் அதை எப்படி தெரிந்து கொள்வது? தெரிந்துகொண்டால்தானே நாம் அதில் வர்த்தகம் செய்து லாபம் பார்க்க முடியும். இந்த பதிவிலிருந்து தொடர்ந்து வர்த்தகம் பற்றி பார்க்கலாம்.

மீண்டும் மீண்டும் நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன், இந்த பதிவின் நோக்கம் பரிந்துரை செய்வது அல்ல. உதாரணத்துக்காக நாம் சில பங்குகளை பார்க்கலாம், சில பங்குகளின் chart ஐ analyse பண்ணலாம், ஆனால் இதில் எங்குமே நான் பரிந்துரை செய்யப்போவது இல்லை. அதனால் நாம் இதில் குறிப்பிடும் பங்குகளை பரிந்துரை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பங்கு வர்த்தகம் என்று எடுத்துக்கொண்டால் அதில் நிறைய வகை இருக்கிறது. அவை என்ன என்று முதலில் பார்ப்போம்.

1. குறுகிய கால வர்த்தகம் (Short Term Trading)
2. Swing Trading
3. Intra-Day அல்லது Day Trading.

நமது பதிவில் நாம் பார்க்கப்போவது Swing Trading. முதலில் Swing Trading என்றால் என்ன என்று கவனிப்போம். எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறுவதும் இல்லை, தொடர்ந்து இறங்குவதும் இல்லை. ஒரு பங்கு குறைந்த பட்சம் 3 முதல் 5 நாட்கள் வரை கூடும். அதன் பின் சிறிய இறக்கம் இருக்கும், மீண்டும் கூட ஆரம்பிக்கும்.- இது அந்த பங்கு ஏறுமுகத்தில் இருக்கும் போது. அதே மாதிரி, இறங்குமுகத்தில் இருக்கும் போதும் ஏற்ற இரக்கத்தோடு தான் இருக்கும். மேலே இருக்கும் chart-ஐ கவனியுங்கள். Rs.312.75 முதல் Rs.358.65 வரை கூடுகிறது, மீண்டும் Rs.305.25 வரை இறங்கி Rs.361.85 வரை கூடுகிறது. மீண்டும் Rs.305.95 வரை இறங்கி Rs.338.40 வரை கூடுகிறது. அடுத்து Rs.326.70 வரை இறங்கி அப்புறம் மேல்நோக்கி செல்கிறது. சுங் ற்றடிங் என்பது முதலில் Rs.313-இல் வாங்கி Rs.358 வரும்போது விற்றுவிட்டு, அடுத்து Rs.305.25 வரும்போது வாங்கி மீண்டும் Rs.360 வாக்கில் விற்று விட்டு மீண்டும் Rs.306 வாக்கில் வாங்கி அடுத்த உயர்வு வரும் போது விற்று இப்படி அடிக்கடி ஒரு பங்கை வர்த்தகம் செய்வது தான் Swing Trading. ஆக Swing Trading என்பது ஒரு பங்கில் ஏற்படும் மிக குறுகிய கால ஏற்றத்தாழ்வுகளை வைத்து லாபம் பார்ப்பது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். எந்த பங்கையும் மிக சரியாக குறைந்த விலையில் வாங்குவது என்பதும் மிக சரியான உயர்வில் விற்பது என்பதும் கண்டிப்பாக நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், ஓரளவு குறைந்த விலை அருகே வாங்கி அதிக விலைக்கு அருகே விற்று லாபம் பார்ப்பது தான் Swing Trading என்பது.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, அனால் இது சாத்தியமா என்று கேட்கத்தோன்றும். சாத்தியம் தான் என்பதை இனி வரும் பதிவுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அனைவருக்குமே பங்குச்சந்தையில் லாபம் பார்க்க வேண்டும் என்பதுதான் ஆவல், ஆனால் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று சரியான வழிமுறைகள் தெரியாமலும், சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் புரோக்கர் சொன்னார் என்று பங்குகளை வாங்கி சில நேரம் லாபத்திலும், பல நேரம் நஷ்டத்திலும் வர்த்தகம் செய்து முடிவில் பங்குச்சந்தை சூதாட்டம், நான் பணத்தை இழந்துவிட்டேன் என்று சந்தையை குறை கூறிக்கொண்டிருக்கிறோம். பங்குச்சந்தை யாரையும் வா வா என்று அழைப்பது இல்லை, அது தன்போக்கில் போய்க்கொண்டிருக்கிறது, நாம் தான் கவனமாக நம்முடைய முதலை (Capital) பாதுகாத்து அதன் மூலம் லாபம் அடையும் வழிகளை தெரிந்துகொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களை விட வர்த்தகம் செய்கிறவர்களே அதிகம்.

Swing Trading செய்ய என்னென்ன தேவை என்றால் கீழ்க்கண்ட விஷயங்களை சொல்லலாம்.

1. ஒரு நல்ல Charting Software
2. கொஞ்சம் Technical Analysis Knowledge
3. குறைந்தபட்சம் தினமும் (பங்குச்சந்தை முடிந்த பிறகு) இரண்டு மணி நேரம்
4. Demat Account
5. அவரவர் தகுதிக்கேற்ப முதல் (Capital Money)
6. ஒரு நல்ல வர்த்தக திட்டம் (Trading Plan)
7. Trading Plan இல் இருந்து கொஞ்சம் கூட விலகிப்போகாத மனஉறுதி

மேலே கூறியவற்றில் 3,4,5,& 7 இவை எல்லாம் அவரவர் சம்மந்தப்பட்டது. அதனால் மற்ற விஷயங்களை பற்றி நாம் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் Charting Software. இன்றைய இன்டர்நெட் உலகில் software பஞ்சம் இல்லை. ஆனால் நாம் வைத்திருக்கும் சாப்ட்வேர் நம்முடைய analysis கு உகந்ததாக இருக்க வேண்டும். அந்த வகையில் www.chartnexus.com என்னை பொறுத்த வரை ஒரு நல்ல choice. இது ஒரு இலவச சாப்ட்வேர் - download செய்துகொள்ளலாம். இதில் தினமும் பங்குச்சந்தை முடிந்ததும் அனைத்து பங்குகளுக்குமான விலை விபரங்களை download செய்துகொள்ள முடியும். நம்முடைய தேவைக்கேற்ற மாதிரி analysis define பண்ண முடியும். நிறைய charting tools இருக்கிறது. அத்தனை tools-இல் நமக்கு தேவையான analysis-ஐ எப்படி செய்துகொள்ளலாம் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம். நான் இலவசமாக தரவிறக்கம் செய்திருக்கும் இந்த மென்பொருளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இனி நாம் கவனிக்க வேண்டியது நமக்கு தேவையான அளவு Technical Analysis மற்றும் Trading Plan. Techninal Analysis என்பது ஒரு கடல் மாதிரி. அனைத்தையும் படிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் படித்த Analysis-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் சூட்சுமம் இருக்கிறது. அதுவுமில்லாமல் Technical Analysis-இல் ஒவ்வொரு Analysis-ம் ஒவ்வொரு Result கொடுக்கும். ஒரு Analysis வாங்கு என்று சொன்னால் இன்னொன்று விற்றுவிடு என்று சொல்லும், இன்னொன்றோ வாங்கவும் வேண்டாம் விற்கவும் வேண்டாம் பங்கு விலை Flat ஆக அதாவது கூடவும் செய்யாமல் குறையவும் செய்யாமல் Flat ஆக இருக்கும் என்று சொல்லும். அனைத்து Analysis-ம் படித்து நம்மை நாம் குழப்பதுக்குள்ளாக்கி நம்முடைய பணத்தை போட்டு பங்கை வாங்கவா விற்கவா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவதை விட நம்முடைய வர்த்தகத்திற்கு பயன்படும் சில Analysis பற்றி நன்றாக தெரிந்துகொள்வோம்.

Analysis பற்றி தெரிந்து கொள்ளும் முன் வர்த்தக திட்டம் (Trading Plan) பற்றி முதலில் முடிவு செய்து கொள்ளலாம். Trading Plan எப்படி தயாரிப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்
Page copy protected against web site content infringement by Copyscape