இதுவரை லாப நஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களை பார்த்தோம். குறிப்பாக, Other Income (இதர வருமானம்), Extra ordinary Income, Operating profit, Interest (வட்டி), Net profit (நிகர லாபம்) மற்றும் EPS என்று சொல்லப்படும் ஒரு பங்கு குறிப்பிட்ட காலத்தில் எத்தனை ரூபாய் சம்பாதித்திருக்கிறது போன்றவற்றை கவனிக்க வேண்டும் என்று பார்த்தோம். இதில் EPS பற்றி இன்னும் விரிவாக பார்க்க வேண்டும்.
EPS பற்றி விரிவாக பார்க்கும் முன், நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்திற்கு இருக்கும் சொத்துக்கள், கடன் மற்றும் மூலதனம் பற்றிய விபரங்களை காட்டும். அதனால் தான் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்தின் நிதியாண்டின் கடைசி நாள் தேதியிட்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். வருடத்திற்கு ஒருமுறை வெளியிடுவது போல், 3 மாதத்திற்கு ஒருமுறையும் வெளியிடப்படும் (Quarterly Result). ஒரு நிதிநிலை அறிக்கை என்பது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மாதிரி அமைப்பில் இருக்கும்.
A. Sources Of Funds
A 1. Equity Share Capital
A 2. Reserves & Surplus
A 3. Networth
A 4. Secured Loans
A 5. Unsecured Loans
A 6. Total Debt
A 7. Total Liabilities
B. Application Of Funds
B 1. Gross Block
B 2. Less: Accum. Depreciation
B 3. Net Block
B 4. Capital Work in Progress
B 5. Investments
B 6. Inventories
B 7. Sundry Debtors
B 8. Cash and Bank Balance
B 9. Total Current Assets
B 10. Loans and Advances
B 11. Fixed Deposits
B 12. Total CA, Loans & Advances
B 13. Current Liabilities
B 14. Provisions
B 15. Total CL & Provisions
B 16. Net Current Assets
B 17. Miscellaneous Expenses
B 18. Total Assets
C. Book Value (Rs)
இதில் நாம் முதலில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான, முதலீட்டாளர் அத்தியாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்றால் அது A3-இல் இருக்கும் Networth என்பது. பங்கு மூலதனம் (Share Capital) மற்றும் Reserves & Surplus இரண்டையும் கூட்டினால் வருவதுதான் Networth. Share Capital என்பது பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் இந்த நிறுவனம் பெற்றிருக்கும் முதலீடு என்பது நம் அனைவருக்கும் தெரியும். Reserves & Surplus என்றால் என்ன? நிறுவனங்கள் ஈட்டிய லாபம் அனைத்தையுமே பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுதுவிடுவதில்லை. லாபத்தில் ஒரு பகுதியை சட்டபூர்வமான ஒதுக்கீடு (Statutory Reserve) என்று ஒதுக்கி வைக்கும். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன் படுத்த பொது ஒதுக்கீடு (General Reserve) என்று ஒரு தொகையை ஒதுக்கி வைக்கும். இந்த ஒதுக்கீடுகள் எல்லாம் போக மீதமுள்ள பணத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு Dividend என்று வழங்கும். Dividend கொடுத்து போக மீதி இருக்கம் லாபத்தை லாப நஷ்ட கணக்கு (Accumulated Income) என்ற பெயரில் வைத்திருக்கும். இப்படி செய்யப்பட ஒதுக்கீடுகள் (Reserves) மற்றும் மீதமுள்ள லாபம் (Accumulated Income) அனைத்துமே Reserves & Surplus என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கையில் பொறுப்புகள் இருக்கும் பகுதியில் காட்டப்படும். இவை அனைத்துமே Networth இல் சேர்க்கப்படும். புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவில் Reserves & Surplus என்பதை Accumulated Income ஆக உதாரணப்படுத்தி இருக்கிறோம். அதாவது Share Capital என்பது பங்குதாரர்கள் செலுத்திய பணம், Reserves & Surplus என்பது நிறுவனம் சம்பாதித்த லாபத்தில் மீதமிருக்கும் பணம். ஒரு நிறுவனத்தில் முதலாளி என்பவர் பங்குதாரர்தான், அதனால் பங்குதாரர் பங்குக்கு செலுத்திய பணம் மற்றும் அந்த பங்குகளை வைத்து நிறுவனம் சம்பாதித்த Reserves & Surplus என்பது அனைத்துமே பங்குதாரர்களுக்கு தான் சொந்தம்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருந்தால் அதனுடைய Share Capital Rs.1,00,000. /- இந்த நிறுவனம் முதலாண்டில் Rs.20,000 லாபமாக சம்பதிதிருக்கிறது என்றால் அதனுடைய EPS - அதாவது ஒரு பங்கின் சம்பாத்தியம் Rs.2/- (Net profit / Number of Equity Shares). இந்த நிறுவனம் 10% Dividend கொடுக்க முடிவு செய்திருக்கிறது (Dividend என்பது பங்கின் முகமதிப்பில் கணக்கிடப்படும்) Rs.10/- முகமதிப்புள்ள பங்குக்கு 10% என்றால் ஒரு ரூபாய் Dividend ஆக ஒவ்வொரு பங்குக்கும் கிடைக்கும். ஆக மொத்தமிருக்கும் 10,000 பங்குகளுக்கு ஒரு பங்குக்கு Re.1/- வீதம் Rs.10,000 Dividend ஆக கொடுக்கப்படும். நிறுவனத்தின் மொத்த லாபம் Rs.20,000 Dividend Rs.10,000 கொடுத்தது போக லாபத்தில் மீதம் Rs.10,000 இருக்கிறது. இது Reserves & Surplus இல் சேர்க்கப்படும். ஆக முதலாமாண்டு முடிவில் Dividend கொடுத்தது போக, நிறுவனத்தின் Networth என்பது Rs.1,10,000 ஆக இருக்கும். (Share Capital Rs.1,00,000/- மற்றும் Reserves & Surplus Rs.10,000 ஆக மொத்தம் Rs.1,10,000 Networth ஆக இருக்கிறது). ஆக ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்க பட்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு அதாவது Networth இன்று Rs.1,10,000 ஆகி இருக்கிறது. நிறுவனத்தின் Networth ஐ அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையை கொண்டு வகுத்தால் ஒரு பங்கின் மதிப்பு என்ன என்பது தெரிய வரும், இந்த மதிப்பைதான் Book Value என்கிறோம். இதனைத்தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிதிநிலை அறிக்கையில் கடைசியாக C-இல் குறிப்பிட்டிருக்கிறோம். அதாவது ஒரு பங்கின் மதிப்பு (Book Value) Rs.11 ஆக இருக்கிறது (1,10,000/10,000). ஒருவேளை இந்த நிறுவனம் இப்போது மூடப்பட்டால் அல்லது இந்த நிறுவனம் இனி நாம் தொழில் செய்யப்போவதில்லை அதனால் நிறுவனத்தை மூடிவிடுவோம் என்ற ஒரு முடிவு எடுத்தால், ஒவ்வொரு பங்குக்கும் Rs.11/- திருப்பி கொடுக்கும். அதாவது பங்கின் Book Value என்னவோ அதுதான் அந்த பங்கின் உண்மையான மதிப்பு அலல்து அகமதிப்பு (Intrinsic Value of a Share).
இந்த Book Value தான் பங்கின் சந்தை விலையா அல்லது இந்த Book Value-விற்கு தான் சந்தையில் பங்கு விற்கப்படுமா என்ற ஒரு கேள்வி வரலாம். இல்லை. சந்தை விலை (Current Markeet Price - CMP) என்பது எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எவ்வளவு வளரும் என்ற கணிப்பு, மற்றும் பொருளாதார நிலை, உலகசந்தை, அந்த பங்குக்கு சந்தையில் இருக்கும் Demand மற்றும் supply போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் Book Value என்பது இந்த நிறுவனத்தின் கடந்த காலத்தை கணக்கில் வைத்து நிர்ணயிக்கப்படுவது. Book Value என்பது ஏற்கனவே அடையப்பட்ட மதிப்பு, சந்தை விலை என்பது எதிர்காலத்தை மனதில் கொண்டு எதிர்பார்ப்பில் நிர்ணயிக்கப்படும் விலை. (இந்த Book Value விஷயத்தில் சத்யம் கம்ப்யூட்டர் விதிவிலக்கு, ஏனென்றால் அதனுடைய கணக்கியல் எவ்வளவு தூரம் சரி ஒரு இன்றுவரை ஒரு தெளிவில்லாத நிலை இருக்கிறது).
சரி Networth மற்றும் Book Value பற்றி தெரிந்துகொண்டோம். இனி Bonus Share விஷயத்துக்கு வருவோம். ஒரு நிறுவனம் Bonus Share எப்படி தருகிறது? நிறுவனத்தின் லாபத்தில் Dividend கொடுத்து போக மீதி இருக்கும் லாபத்தை Reserves & Surplus இல் வைத்திருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோம். அந்த Reserves & Surplus இல் இருந்துதான் Bonus Share கொடுக்கப்படும். நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட உதாரணத்தின் படி Rs.10/- முகமதிப்பில் 10,000 ௦௦௦பங்குகளை வெளியிட்டிருக்கும், Share Capital Rs.1,00,000/- ஆக இருக்கும் நிறுவனம் 5 ஆண்டுகள் வெற்றிகரமாக தொழில் செய்து Reserves & Surplus இல் Rs.2,00,000/- வைத்திருக்கிறது என்றால் அந்த நிறுவனத்தின் Networth Rs.3,00,000/- ஆக இருக்கும். ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருக்கிறது. Reserves & Surplus இல் Rs.2,00,000/- இருப்பதால், பங்குதாரர்களுக்கு Dividend கொடுப்பதற்கு பதிலாக அதிலிருந்து Bonus Share கொடுக்கலாம் என்று நிறுவனம் முடிவு செய்து, 1:1 என்ற விகிதத்தில் Bonus Share கொடுக்கிறது என்று வைத்துக்கொண்டால் ஏற்கனவே ஒரு பங்கு வைத்திருக்கும் பங்குதாரருக்கு ஒரு பங்கு இலவசமாக கிடைக்கும். பங்குதாரரை பொறுத்த வரை பணம் கொடுக்காமல் ஒரு பங்கு இலவசமாக கிடைக்கிறது. ஆனால் அது உண்மையிலேயே இலவசமா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், Bonus Share கொடுத்த பிறகு நிறுவனத்தின் Networth மற்றும் Book Value எப்படி இருக்கிறது என்று பார்போம்.
Rs.10/- முகமதிப்பில் 20000 Share (நிறுவனம் வெளியிட்ட பங்குகள் 10000 மற்றும் bonus Share ஆக கொடுத்த பங்குகள் 10000 ஆக மொத்தம் 20000 பங்குகள்) என்பதால் Share Capital Rs.2,00,000/-. Reserves & Surplus Rs.2,00,000/- இருந்தது இதில் Rs.1,00,000/- bonus Share ஆக கொடுக்கப்படிருக்கிறது என்பதால் bonus Share கொடுத்த பிறகு Reserves & Surplus 1,00,000/- ஆக இருக்கும். ஆக இரண்டையும் கூட்டினால் Networth Rs.3,00,000/- ஆக இருக்கிறது. Networth இல் மாற்றமில்லை. ஆனால் பங்கின் Book Value என்ன? Rs.3,00,000/20000 பங்குகள் என்பதால் Book Value Rs.15/- ஆக இருக்கிறது. ஏற்கனவே Rs.30/- Book Value இருந்த பங்கின் இப்போதைய Book Value Rs.15/- மட்டுமே. Bonus Share கொடுக்கும் முன் நிறுவனம் மூடப்பட்டிருந்தால், ஒரு பங்குக்கு Rs.30/- கிடைத்திருக்கும். ஆனால் Bonus Share கொடுத்த பிறகு நிறுவனம் மூடப்பட்டால் ஒரு பங்குக்கு Rs.15/- தான் கிடைக்கும் ஆனால் பங்குதாரர் அவர் வைத்திருந்த ஒரு பங்குக்கு ஒரு பங்கு இலவசமாக பெற்றதால் அவர் இரண்டு பங்கு வைத்திருக்கிறார் என்பதால் அவருக்கு ஒரு பங்குக்கு Rs.15/- வீதம் 2 பங்குக்கும் சேர்த்து Rs.30/- கிடைக்கும். ஆக பங்குதாரருக்கு Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை. சரி இப்படி கணக்கு பார்த்தால் லாபமில்லை, Bonus Share கிடைத்த பிறகு பங்கு சந்தையில் பங்கின் விலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
Bonus Share கொடுக்கும் முன் இந்த நிறுவனத்தின் பங்குகள், சந்தையில் Rs.50/- ஆக விற்பனை ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். Bonus Share கிடைத்த அன்றே சந்தையில் பங்கின் விலை, போனசு Share விகிதத்திற்கு குறைந்து விடும். 1:1 Bonus என்பதால், Rs.50 ஆக இருந்த பங்கின் விலை Rs.25/- (Rs.50/2) ஆக குறைந்து விடும். ஏன் இப்படி குறைகிறது? ஏற்கனவே ஒரு பங்கின் Book Value Rs.30/- ஆக இருந்தது இப்போது பாதியாக குறைந்தது ஒரு காரணம். மேலும், Bonus Share கொடுப்பதற்கு முன் நிறுவனம் சம்பாதித்த நிகர லாபம் 10000 பங்குகளுக்கு மட்டுமே பிரிக்கப்படும், Bonus Share கொடுத்த பிறகு, அதே லாபம் 20000 பங்குகளுக்கு பிரிக்கப்படும். ஆக ஒரு பங்கின் வருமானம் (EPS) பாதியாக குறையும். இந்த காரணங்களால், bonus Share கொடுத்தும், சந்தையில் பங்கின் விலை உடனடியாக குறைகிறது. Bonus Share கிடைக்கும் முன் ஒரு பங்கை விற்று Rs.50/- கிடைக்குமென்றால் Bonus Share கிடைத்த பிறகு இரண்டு பங்கையும் விற்றால் தான் Rs.50/- கிடைக்கும். அதாவது Bonus Share கிடைத்ததால் எந்த லாபமும் இல்லை.
இப்படி எந்த லாபமும் இல்லை என்றால் எதற்கு அந்த Bonus Share?? ஆனால் ஒரு நிறுவனம் Bonus Share கொடுக்க போகிறது என்ற தகவல் வந்ததும் சந்தை முழுக்க அந்த நிறுவனம் பற்றி மிக பெரிதாக பேசிக்கொள்கிறார்களே ஏன்? எந்த லாபமும் இல்லாத ஒரு விஷயத்துக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நினைக்கதோன்றும். Bonus Share கிடைப்பதால் குறுகிய கால முதலீட்டாளருக்கு எந்த லாபமும் இல்லை. ஆனால் நீண்ட கால முதலீட்டாளருக்கு கண்டிப்பாக லாபம் உண்டு. முதல் ஆதாயம் சந்தையில் பங்கின் விலை குறைவதால் அதிக முதலேட்டாளர்கள் நிறுவனத்தின் பங்கினை வர்த்தகம் செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து Bonus கொடுக்கும் அளவு இந்த நிறுவனம் ஏற்கனவே லாபம் சம்பாதித்திருக்கிறது என்பது வெளி உலகுக்கு தெரிய வருவதால், அந்த நிறுவனத்தில் பங்கு வாங்கினால் எதிர்காலத்திலும் நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்து அதனால் பங்கின் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் நிறைய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வார்கள். அப்படி அதிக முதலீடு செய்ய ஆர்வம் உண்டாவதால் இந்த நிறுவனத்தின் பங்குகளுக்கு Demand கூடி அதனால், பங்குகளின் விலை கூடும். உதாரணமாக, 3 ஆண்டுகளுக்கு முன் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு Rs.5400 விலையில் இருக்கும் போது, ஒரு பங்கு வைத்திருப்பவருக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் Bonus Share கொடுத்தது. உடனே பங்கின் விலை Rs.1350 ஆக குறைந்தது. அதன்பின் பங்கின் விலை சுமார் Rs.2500 வரை கூடியது. அதாவது ஒரு பங்கு வைத்து மூன்று பங்கு Bonus ஆக பெற்ற ஒரு பங்குதாரர் தான் வைத்திருக்கும் 4 பங்குகளையும் விற்றால் அவருக்கு கிடைத்த பணம் Rs.10000. ஆக Bonus Share என்பது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் லாபம் தரும். மாறாக Bonus Share கிடைக்கப்போகிறது, நான் உடனே அதை விற்று லாபம் பார்த்து விடுவேன் என்று நினைத்து வாங்கினால் நிச்சயம் உடனடி லாபம் இல்லை. மேலும் Bonus Share என்பது கண்டிப்பாக இலவசமில்லை. ஏற்கனவே பங்குதாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய Reserves & Surplus இல் இருந்து கொடுக்கப்படுவதுதான் Bonus Share. மற்றபடி Bonus Share நிச்சயமாக இலவசமில்லை. மேலும் Bonus Share கொடுப்பதால் எதிர்காலத்தில் EPS குறையும்.
ஆக ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் EPS-ஐ ஒப்பிட்டு பார்க்கும் போது, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு EPS குறைந்திருந்தால் உடனே இந்த நிறுவனம் சரி இல்லை என்று முடிவு செய்துவிடக்கூடாது. அவ்வாறு முடிவு செய்யும் முன், நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக பங்கு வெளியிட்டிருக்கிறதா, Bonus Share கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் Share Split செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். Share Split என்றால் என்ன, அது எவ்வாறு EPS-ஐ பாதிக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்போம்.
11 comments:
Excellent Article
நண்பரே எனக்கு தற்போது 22 வயது , மற்றும் நான் இப்போது இந்தியாவில் வசிக்கவில்லை .எனக்கு பங்குச்சந்தையில் மிகுந்த ஆர்வம் உண்டு ஆனால் எனக்கு இதில் சிறிதளவும் அனுபவ அறிவு இல்லை ..நான் தற்போது பங்குச்சந்தையில் இணைய விரும்பினால் ஆரம்பதொகையாக எவ்வளவு செலுத்த வேண்டும், பங்குச்சந்தையில் இணைவதற்கான வழிமுறைகள் என்ன ? ...முடிந்தால் இதை பற்றி கொஞ்சம் தெளிவாக விளக்கி எழுத முடியுமா?.
Dear Mr.Kalyan, You Article was excellent, keep you the great work. My Hearty Wishes. It's so easily understandable to any lay man.
Keep going with your great job!
A request, I would like save your articles about this Shares, if you could, please send me in .pdf format to my e-mail ID felix212@gmail.com
Felix
அப்பாவி தமிழன், நீங்கள் பங்கு சந்தை என்பது சூதாட்டமா? தொடரை ஆரம்பத்தில் இருந்து படியுங்கள், உங்களது கேள்விக்கு விடை கிடைக்கலாம். இல்லை என்றால் எழுதுங்கள், தெளிவு படுத்துகிறேன்.
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி Muji, அப்பாவி தமிழன் & Felix.
Very good Post.keep going.
Supera sir, ungal pani thodarattum – nan ungal pathivai paditthu eppothu than pangu sandhai aarvam adhikamaki vittathu. Nan intraday / short term trading seyya aasai padukiren. eanakku aengu eappadi tips kidaikkum ?
Supera sir, ungal pani thodarattum – nan ungal pathivai paditthu eppothu than pangu sandhai aarvam adhikamaki vittathu. Nan intraday / short term trading seyya aasai padukiren. eanakku aengu eappadi tips kidaikkum ?
Hello! Kalyan.
Am expecing to see your 8th Part.
You post monthly or fornightly?
Regards
Felix
First time I see this blog. A good and lucid explanation is given in simple words.
Hats off to you
G.Raggavendran.
Can we talk to you Kalyan
Anonymous said...
Can we talk to you Kalyan.
How??? How do u want to talk to me?
BR
Kalyan
Post a Comment