You will make it....

You will make it....

Friday, April 24, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 11

சென்ற பதிவில் Promoters Holding பற்றி பார்த்தோம். ஒரு நிறுவனத்தில் Promoters என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் ஓரளவு பங்குகளை வைத்திருப்பார்கள். மீதமுள்ள பங்குகளை வெளியாட்கள் - அதாவது Promoters அல்லாதவர்கள் - வைத்திருப்பார்கள். குறிப்பாக Mutual Funds, FII (Foreign Institutional Investors) என்று சொல்லப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பிற நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் Individual Investors என்று சொல்லப்படும் தனிநபர் முதலீட்டாளர்கள் போன்றவர்களும் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பார்கள். பொதுவாக ஒரு நிறுவனத்தில் Promoters Holding குறையாமல் இருப்பது நல்லது. நாம் ஏற்கனவே சொன்னது போல் சில நிறுவனங்களில் Promoters அவர்களுடைய பங்கை கூட்டிக்கொண்டு இருப்பார்கள். அப்படி இருந்தால் ரொம்ப நல்லது. ஆனால்
Promoters Holding குறையாமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

Promoters அல்லாமல் மற்றவர்களில் குறிப்பாக கவனிக்க வேண்டியது FII மற்றும் Mutual Funds வைத்திருக்கும் பங்குகள். ஏன் இதை கவனிக்க வேண்டும் என்றால், ஒரு நிறுவன பங்கை வாங்கும் முன் நாம் ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை பற்றி எல்லாம் நிறைய அலசி பார்க்க வேண்டும். மேலும் இவை எல்லாம் கடந்த காலத்தில் அந்த நிறுவனம் எப்படி நடந்திருக்கிறது என்பதை சொல்லுமே ஒழிய, எதிர்காலத்தில் அது நிறுவனம் எப்படி செயல்படும் என்பதை பற்றி சொல்வது அல்ல. ஆனால் Directors Report என்று சொல்லப்படும் நிறுவனத்தின் இயக்குனர்கள் (Directors) கொடுக்கும் அறிக்கை ஒவ்வொரு வருட நிதிநிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் நிறுவனம் கடந்த ஆண்டு என்னவெல்லாம் சாதித்தது, என்னென்ன தடைகளை தாண்டி வந்தது, மேலும் எதிர்காலத்தில் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, அதை அடைய என்னென்ன வழிமுறைகள் போன்றவை பற்றி சொல்லப்பட்டிருக்கும். இவ்வற்றை எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. ஆனால் நமக்கு இருக்கும் குறைந்தபட்ச நேரத்தில் இவ்வளவு தூரம் நம்மால் கவனிக்க முடியுமா? அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வருவது ஒரு தனிப்பட்ட நபருக்கு கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கலாம்.

உதாரணமாக ஆண்டுக்கு ஒரு கோடி ருபாய் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனை இலக்கு நூறு கூடி என்று Directors Report-இல் சொல்லி இருக்கலாம். ஒரு கோடி ருபாய் விற்பனை செய்யும் நிறுவனம் நூறு கோடியை ஒரு ஆண்டில் எட்டுவது சாத்தியமில்லை என்று நாம் அந்த விஷயத்தை நம்பாமல் அந்த நிறுவன பங்கில் முதலீடு செய்யாமல் விட்டு விடலாம். ஆனால் ஒரு வேளை அந்த நிறுவனம் தன்னுடைய பொருளை விற்பனை செய்ய ஏதாவது ஒப்பந்தம் செய்திருக்கலாம் அல்லது வெளி நாட்டில் ஒரு கிளை ஆரம்பிக்கலாம், இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த மாதிரி விஷயங்களை ஒரு சிறிய முதலீட்டாளர் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல அலல்து சாத்தியாமில்லாமல் கூட இருக்கலாம். இப்படி விஷயங்கள் தெரியாமல் இருந்து அதனால் ஒரு நிறுவத்தில் முதலீடு செய்யாமல் இருந்தோமென்றால், ஒரு நல்ல வாய்ப்பை தவற விடுகிறோம் என்று அர்த்தம். ஆனால் Mutual Fund மற்றும் FII போன்றவர்கள் அதற்கென்றே ஒரு குழு அமைத்து நிறுவனத்தை பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்து அதன் பிறகே முதலீடு செய்வார்கள். ஒரு சிறு முதலீட்டாளர் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை எல்லாம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி அனைத்தும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளவர்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் முதலீடு செய்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கும் என்று சொல்லலாம்.

அதனால்தான் ஒரு நிறுவனத்தில் Promoters அல்லாமல் பிற நிறுவனங்கள் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் போதும் அதனுடன் Shareholding Pattern என்று சொல்லப்படும், பங்குகளை யார் யார் வைத்திருக்கிறார்கள் என்ற விபரத்தையும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும். அந்த விபரத்தை நாம் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். கீழே இணைத்திருப்பது BSE வலைத்தளத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் Shareholding Pattern. (Click the picture to enlarge)



பங்குகள் பற்றிய எந்த ஒரு வலைத்தளத்திலும் நிறுவனத்தின் பங்குகள் பற்றிய விபரங்களை நாம் பார்க்கும் போது இந்த நிறுவனத்தில் Mutual Funds பங்குகளை வைத்திருக்கிறதா என்பதை பார்க்க ஒரு சுட்டி வைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்படை நோக்கமே நிறுவனத்தை பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதனால் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் Shareholding Pattern-ஐ கவனத்தில் கொள்வது அவசியம்.

மேலும் நாம் ஒரு நிறுவனத்தில் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்கியபின், அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளையும் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும்போது Promoters, Mutual Funds மற்றும் FII முதலீட்டில் இருக்கும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். ஒருவேளை இவர்களில் யாராவது முதலீட்டை குறைக்க ஆரம்பித்தார்கள் என்றால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எதற்காக குறைக்கிறார்கள் என்பது நமக்கு சொல்லப்படாவிட்டாலும், நாம் அதற்கான காரணத்தை அறிய முற்பட்டால் நல்லது. ஒருவர் ஒரு நிறுவனத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடுசெய்துவிட்டு அப்புறம் முதலீட்டின் அளவை குறைக்கிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? ஒருவேளை நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லாமல் இருந்து, அதனால் எதிர்காலத்தில் இந்த முதலீடு நல்ல வருமானம் தராது என்ற ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இந்த நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தை விட அதிக லாபம் தரும் வேறு நிறுவனத்தில் முதலீடு செய்ய இந்த முதலீட்டை குறைத்திருக்கலாம் அல்லது இதில் எதுவுமே காரணம் இல்லாமல் முதலீடு செய்தவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் முதலீட்டை குறைத்திருக்கலாம். இதில் கடைசி காரணத்திற்காக - அதாவது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒருவர் முதலீட்டை குறிக்கிறார் என்றால் அதில் மற்ற முதலீட்டாளர்கள் யோசிக்க ஒன்றுமே இல்லை. ஆனால் முதல் இரண்டு காரணங்களுக்காக ஒருவர் முதலீட்டை குறைக்கிறார் என்றால் பிற முதலீட்டாளர்கள் யோசிக்கக் வேண்டும். இந்த நிறுவனத்தில் எதிர்கால லாபம் குறைகிறது என்று Mutual Funds அல்லது FII முடிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் நாம் அதை பின்பற்றியே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன் எப்படி Mutual Fund மற்றும் FII-ஐ பின்பற்றினோமோ அதேபோல் அவர்கள் முதலீட்டை குறைக்கிறார்கள் என்றால் அதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நமக்கு தெரியாத அல்லது நம் கவனத்திற்கு வராத விஷயங்கள் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் நாம் ஏற்கனவே எழுதியது போல், முதலீடு செய்துவிட்டு, Mutual Funds மற்றும் FII தாங்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்கள் செய்யும் முதலீட்டின் அளவு பெரிது என்பதால் அவர்களின் கவனமும் அதிகமாக இருக்கும். அதனால் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறது, Promoters, Mutual Funds மற்றும் FII வைத்திருக்கும் பங்குகளின் அளவில் சென்ற காலாண்டை விட இந்த காலாண்டில் என்ன மாற்றம் என்பதை எல்லாம் கவனித்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

இந்த பதிவில் இருக்கும் விஷயங்களை படித்தபின், இனிமேல் Mutual Funds அல்லது FII முதலீடு செய்யாத நிறுவனத்தில் நான் முதலீடு செய்யமாட்டேன் என்று முடிவு செய்துவிடக் கூடாது. நாம் ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கு, நிதிநிலை அறிக்கை மற்றும் அந்த நிறுவனம் சார்ந்திருக்கும் துறை பற்றியெல்லாம் அலசி பார்த்து அந்த பங்குகளை வாங்கலாம் என்று முடிவு செய்திருப்பின், அந்த நிறுவனத்தில் Mutual Funds அல்லது FII போன்றோர்களும் முதலீடு செய்திருந்தால் அந்த நிறுவனங்களில் நாம் தைரியமாக முதலீடு செய்யலாம் என்றுதான் சொல்கிறேனே ஒழிய, அவர்கள் முதலீடு செய்யாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் அல்ல என்று சொல்லவில்லை. நம் நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கிறது, அவற்றில் எல்லாம் அவர்கள் முதலீடு செய்தால் தான் அவை நல்ல நிறுவனம் என்று நினைத்தோமேன்றால் அது தவறு. பங்குகளில் செய்யும் முதலீடு என்பது குறிபிட்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. இன்னும் கவனிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது, அவற்றை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இதுவரை நாம் கூறியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு - அதாவது Long-term மற்றும் Medium-term முதலீட்டாளர்களுக்கு. ஏனென்றால் வர்த்தகம் செய்கிறவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் இவ்வளவு துல்லியமாக பார்ப்பதில்லை. பங்கு வர்த்தகர்களின் ஒரே குறிக்கோள் விலை குறையும் போது வாங்கவேண்டும், கூடும் போது விற்க வேண்டும் என்பது மட்டுமே. பங்கு வர்த்தகத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் வேறு, முதலீட்டில் எடுக்க வேண்டிய முடிவுகள் வேறு. இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க பழகிவிட்டோமென்றால் பங்குச்சந்தை முதலீடு அல்லது பங்குச்சந்தை வர்த்தகம் என்பது எளிதாக இருக்கும். அடுத்து வரும் பதிவுகளில் முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டிய இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்

3 comments:

A Reader said...

Keep writing. Very interesting...

butterfly Surya said...

தொடருங்கள்.

வாழ்த்துகள்.

Kabilaaa said...

This is the one i was looking for. its seems that i got everything that i looked for.. great work.. Hope people will be learning from this...best wishes from

kabilan

Page copy protected against web site content infringement by Copyscape