இதுவரை எழுதிய பதிவுகளில் ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் என்னென்ன பார்க்க வேண்டும் என்று கவனித்தோம். அதில் மிக முக்கியமானது EPS என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் EPS-ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்போம்.
EPS என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு சம்பாதித்தது என்பதை குறிக்கும். அனால் எந்த நிறுவனமும் சம்பாதித்த அனைத்து பணத்தையும் பங்குதாரர்களுக்கு Dividend ஆக தருவதில்லை. EPS இன் ஒரு பகுதியை Dividend ஆக நிறுவனம் பங்குதாரர்களுக்கு கொடுக்கும். ஆக ஒரு நிறுவனத்தின் EPS நன்றாக இருந்தாலும் அது Dividend தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். சில நிறுவனங்கள் நிறைய EPS சம்பாதித்திருப்பதாக கணக்கு காட்டி இருந்தாலும், அந்த நிறுவனம் Dividend தரவில்லை என்றால் ஒன்று அந்த நிறுவனம் சம்பாதித்த பணத்தை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் அந்த நிறுவனத்தில் பணப்பிரச்சினை இருக்கிறதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அந்த நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்திருந்தாலும், விரிவாக்கம் எதுவும் செய்யவில்லை எத்ன்றால் Dividend கொடுக்க அதனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்று ஒரு கேள்வி வரும். அந்த நிறுவனத்தால் விற்பனை செய்த பணத்தை ஒழுங்காக வசூலிக்க முடியாமல் இருந்திருக்கலாம். சில நிறுவனங்கள் நல்ல லாபம் காட்டினாலும், Dividend தர முடியாமல் இருந்து, அதற்கு பதில் Bonus Share கொடுத்து பங்குதாரர்களை சமாதான படுத்தலாம். அதனால் EPS அதிகமாக இருந்தாலும் வருடா வருடம் நிறுவனம் Dividend தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். தொடர்ந்து Dividend கொடுத்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம்.
மேலும் EPS என்பது வருடா வருடம் கூடிக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை காலாண்டு அறிக்கையை பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும் என்பது பங்குசந்தையின் விதி. அதனால் ஒவ்வொரு காலாண்டு அறிக்கையையும் நாம் கவனிக்க வேண்டும். விற்பனை கூடி இருக்கிறதா, Operating Profit கூடி இருக்கிறதா, என்பதை எல்லாம் கவனிக்கும் நேரத்தில் EPS கூடி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த நிறுவனமும் எப்பொழுதுமே நல்ல நிறுவனமாக இருப்பதில்லை. இன்று நல்ல நிலையில் இருக்கும் நிறுவனம் அடுத்த ஆண்டு மோசமாக பாதிக்கப்படலாம். அதனால் காலாண்டு அறிக்கையை கவனமாக பார்க்க வேண்டும். இவை எல்லாம் நல்ல படியாக இருந்தால், அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம். அந்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல லாபம் சம்பாதித்து வளரும்போது, அதன் காரணமாக நாம் வைத்திருக்கும் பங்குகளின் விலையும் கூடும்.
இது மட்டுமில்லாமல் பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 7 இல் குறிப்பிட்டிருந்தது போல், ஒரு பங்கின் Book Value என்னவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக Book Value என்பது சந்தை விலையை நிர்ணயிப்பது இல்லை என்றாலும், ஒரு பங்கின் Book Value நல்ல நிலையில் இருந்தால் அந்த நிறுவனம் ஏற்கனவே நல்ல முறையில் நடத்தப்பட்டு அதனால் லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம். Book Value என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருப்பதால் அடைந்திருக்கும் மதிப்பு. ஆனால் சந்தை விலை என்பது, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எப்படி வளரும் என்னும் கணிப்பை வைத்து நிர்ணயிக்க படுகிறது. அதனால் அனேகமாக எல்லா பங்குகளின் சந்தை விலையும், Book Value-வை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக, சில பங்குகளின் Book Value சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். ஏன் இப்படி? சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இன்னும் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். நல்ல நிலையில் நிறுவனம் நடந்துகொண்டிருந்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வரை அந்த நிறுவன பங்கின் சந்தை விலை கூடுவது என்பது கஷ்டமான காரியம். இன்று மிக பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்கள் ஒரு காலத்தில் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தவைதான். அதனால் அப்படி பட்ட நிறுவனத்தின் பங்குகளை கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி சந்தை விலையை விட Book Value அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை Value Buy என்று சொல்கிறார்கள்.
Book Value அதிகம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்கி விடக்கூடாது. அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது, அந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு, Promotors என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களை பற்றி தெரிந்துகொள்ளுதல் மற்றும் Promotors நிறுவனத்தில் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் அலசி பார்த்து வாங்கவேண்டும். இது பற்றி வரும் பதிவில் பார்போம்.
No comments:
Post a Comment