You will make it....

You will make it....

Thursday, February 5, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 2

இதுவரை பங்கு என்றால் என்ன என்று பார்த்தோம், இனி பங்குகளை வாங்கி விற்பதற்கு தேவையான சில அடிப்படை விஷயங்களை கவனிப்போம்.

ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டதும் அதை வாங்கிய பங்குதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட ஒரு பங்கு பத்திரம் (share certificate) கொடுக்கும். நாம் படித்து வாங்கும் பட்டம் போலவே பங்கு பத்திரமும் அச்சடித்து கொடுக்கப்படும். ஒவ்வொரு பத்திரத்திற்கும் வரிசை எண் (share certificate number) இருக்கும். ஆக ஒவ்வொரு பங்குதாரரும் தான் வாங்கிய பங்குக்கு ஒரு பங்கு பத்திரம் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பங்குக்கும் ஒவ்வொரு பத்திரம் என்று இல்லாமல் ஒரு நபர் எத்தனை பங்கு வாங்கியிருக்கிறார் என்பது பங்கு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனமும் பங்குதாரர் பதிவேடு (shareholders register) வைத்திருக்கும். அதில் பங்கு பாத்திரத்தின் எண், அதை வாங்கியவரின் பெயர், முகவரி, அவர் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கை இப்படி அந்த பங்கு பத்திரம் மற்றும் பங்குதாரர் பற்றிய விபரங்கள் அனைத்தும் இருக்கும்.

பங்கு வாங்கியவர் பங்குகளை விற்கவேண்டும் என்றால், அந்த பங்கு பத்திரத்தின் பின்புறம் பங்கை விற்பவரும் அவரிடமிருந்து பங்கு வாங்குபவரும் கையொப்பமிட வேண்டும். கையொப்பமிடப்பட்ட பங்கு பத்திரம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும். அதன் பிறதுதான் புதிதாத வாங்கியவரின் பெயருக்கு பத்திரம் மாறும். இதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்தது. உதாரணமாக, பங்கு விற்றவரின் கையொப்பம் சிறிது வித்தியாசமாக இருந்தாலும் இந்த விற்பனை செல்லாது என்று நிறுவனத்தால் நிராகரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் எல்லாம் சரியாக இருந்தாலும், நிறுவனத்திற்கு கையொப்பமிட்ட பத்திரத்தை தபாலில் அல்லது courier மூலமாக அனுப்பி, அதை நிறுவனம் பெற்றுக்கொண்டு அனைத்தையும் சரி பார்த்து, பங்குதாரர் பதிவேட்டில் பங்கு உரிமையாளர் பெயர் மாற்றி பங்கு பத்திரத்தை திரும்ப அனுப்பித்தர நிறைய நாட்கள் ஆகும். மேலும் ஒருவர் பங்கு வாங்க வேண்டும் என்றாலும் விற்க வேண்டும் என்றாலும் புரோக்கரிடம் சொல்லிவைத்து அவர்கள் விரும்பிய விலையில் பங்கு பரிவர்த்தனை நடைபெற காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. புரோக்கர் மனது வைத்தால் நல்ல விலையில் பங்கு நமக்கு கிடைக்கும் என்று புரோக்கரை பிரதானமாக நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இப்படி பட்ட நடைமுறை சிக்கல்கள் எல்லாம் இப்போது இல்லை.

இப்போதும் நிறுவனம் பங்குதாரர் பதிவேடு வைத்திருக்கிறது, ஆனால் பங்கு பத்திரத்தை அச்சடித்து கொடுப்பதற்கு பதிலாக "Dematerialization" என்று அழைக்கப்படும் "Demat" முறை வந்து விட்டது. இந்த முறைப்படி, பங்கு அச்சடிக்கும் வேலை எல்லாம் இல்லை. எலக்ட்ரானிக் முறைப்படி பங்குகள் அனைத்தும் கணினி மூலமாகவே கொடுக்கப்படுகிறது. இப்படி பங்குகள் கணினி மூலமாக இருப்பதால் நாமும் Demat account என்று சொல்லப்படும் Demat கணக்கை தொடங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு முறை புரோக்கரை தொடர்பு கொண்டு சில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தோமென்றால் நம் பெயருக்கு Demat account தொடங்கப்படும். Demat account தொடங்கிய பின் நம்முடைய Demat ஐ வைத்து கணினி மூலமாக நாமே நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். இங்கே நாம் நேரிடையாக என்று குறிப்பிடுவது புரோக்கரிடம் சொல்லி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், விற்பவருக்கும் வாங்குபவருக்கும் கிட்டத்தட்ட நேரடி தொடர்பு போல் ஒரு வித செயல்பாட்டின் மூலம் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

"BSE", "NSE" என்றெல்லாம் தொலைக்காட்சியிலோ பத்திரிக்கையிலோ நீங்கள் தினமும் பார்த்திருப்பீர்கள். நாம் Demat account ஆரம்பித்த பின், நம்முடைய Demat மூலமாக மும்பை பங்கு சந்தை என்று சொல்லப்படும் BSE மற்றும் தேசிய பங்கு சந்தை என்று சொல்லப்படும் NSE ஆகிய இரண்டு பங்கு சந்தைகளிலும் நாம் நேரிடையாக பங்குகளை வாங்கவோ விற்கவோ முடியும். பங்கு வாங்கி இரண்டே நாளில் நம்முடைய Demat-ல் நாம் வாங்கிய பங்கு வரவு வைக்கப்படும். Demat என்பது நம்முடைய வங்கி கணக்கு மாதிரிதான். நம்முடைய வங்கி கணக்கில் நாம் பணம் செலுத்தினால், நம் கணக்கில் எப்படி வரவு வைக்கப்படுகிறதோ அதே மாதிரி தான் Demat-ம். நாம் வாங்கிய பங்குகள் வரவு வைக்கப்படும், வாங்கிய பங்குகளை விற்றால் நம்முடைய Demat கணக்கிலிருந்து கழிக்கப்படும்.

ஆக இன்றைய சூழ்நிலையில் Demat இருந்தால்தான் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முடியும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த Demat account எப்படி ஆரம்பிப்பது? Demat ஆரம்பிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு பங்கு புரோக்கரை அணுக வேண்டும். உதாரணமாக ICICI, Kotaksecurities, Indiainfoline, Indiabulls இப்படி நிறைய புரோக்கர்கள் இருக்கிறார்கள். இவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டால் Demat ஆரம்பிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்களே முடித்து தருவார்கள். நாம் ஒரு புரோக்கரிடம் Demat ஆரம்பித்தால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? அதுவுமே இலவசமாக கிடைப்பதில்லையே..! நாம் Demat ஆரம்பித்தால் வருடா வருடம் Demat கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை நம்மிடம் வசூலிப்பார்கள். இது மட்டுமின்றி, ஒவ்வொரு முறை நாம் அந்த Demat மூலமாக பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் நாம் வாங்கிய அல்லது விற்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நம்மிடம் புரோக்கர் கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணங்கள் ஒவ்வொரு புரோக்கருக்கும் மாறுபடும். அதனால் Demat ஆரம்பிக்கும் முன் கட்டண விஷயங்களை விசாரித்துப் பார்த்து அதன் பிறகு எந்த புரோக்கர் என்று முடிவு செய்து Demat ஆரம்பிப்பது நல்லது.

இனி அடுத்த பதிவில் சந்த்திப்போம்.

No comments:

Page copy protected against web site content infringement by Copyscape