சென்ற பதிவில் லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றை பார்த்தோம். குறிப்பாக Operating Profit, Other Income மற்றும் Extra-ordinary Items பற்றி பார்த்தோம். இது மட்டுமில்லாமல் விற்பனை வருடா வருடம் கூட வேண்டும் என்றும் பார்த்தோம். அதேமாதிரி விற்பனை மட்டும் கூடினால் போதாது, அப்படி கூடும் விற்பனை லாபத்தையும் கூட்ட வேண்டும் என்றும் பார்தோம். இனி இந்த பதிவில் வேறு என்னென்ன கவனிக்க வேண்டும் என்று பார்போம்.
லாபநஷ்ட கணக்கில் வட்டி (Interest) என்று ஒரு line item இருக்கும் (வரிசை என் 6-ல் உள்ளது : பார்க்க பாகம் 4). இது ஒரு நிறுவனம் குறிப்பிட்ட வருடத்தில் எவ்வளவு பணம் வட்டி செலுத்தியிருக்கிறது என்பதை குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் தொழில் செய்வது என்பது மிக கஷ்டமான காரியம், கிட்டத்தட்ட கடன் இல்லாமல் தொழில் செய்ய முடியாது என்று கூட கூறலாம். ஆக கடன் இருந்தால் வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் குறைந்த அளவு வட்டி செலவு செய்திருக்கலாம், வேறுசில நிறுவனங்களோ சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டிக்கே செலவிடலாம். நாம் ஏற்கனவே கூறியது போல் குறைந்தபட்சம் மூன்று வருட லாபநஷ்ட கணக்கை நாம் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு வருடமும் வட்டிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி அதிகமா குறைவா என்று கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வட்டி குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்தியிருக்கிறது என்று பொருள். இது ஒரு விதத்தில் நல்ல விஷயம்.
கடன்களை திருப்பி செலுத்துவதற்கு அந்த நிறுவனம் பணத்தை இரண்டு வழிகளில் ஏற்பாடு செய்யலாம். ஒன்று நல்ல லாபம் சம்பாதித்து லாபத்தில் வந்த பணத்தை வைத்து கடனை அடைத்திருக்கலாம் அல்லது புதிதாக பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் வந்த பணத்தை வைத்து கடன்களை திருப்பி செலுத்தி இருக்கலாம். புதிதாக பங்குகளை வெளியிடாமல் (லாபத்தின் மூலம்) கடன்களை திருப்பி செலுத்தும் அளவு இந்த நிறுவனத்திடம் பணம் இருந்திருக்கிறது என்றால் அந்த நிறுவனம் நல்ல நிலையில் நடக்கிறது என்று அர்த்தம். நிச்சயமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் நம் முதலீடு நன்கு வளரும் என்று நம்பலாம். (இதை மட்டுமே வைத்து முதலீடு செய்து விடக்கூடாது... முதலீடு செய்யலாம் என்பதற்கு சாதகமான அம்சங்களில் இதுவும் ஒன்று.) புதிதாக பங்குகளை வெளியிட்டு கடன்களை அடைத்திருக்கிறது என்றால் அதன் சாதக பாதகங்களை வரும் பதிவுகளில் கவனிப்போம்.
சில நிறுவனங்கள் நல்ல லாபம் சம்பாதித்திருக்கும் ஆனால் சம்பாதித்த லாபத்தில் பெரும்பகுதி வட்டிக்கு செலவாகி இருக்கும். இப்படி லாபத்தில் பெரும்பகுதியை வட்டி செலுத்த செலவிட்டால், முதலீடு செய்தவர்களுக்கு என்ன மிஞ்சும்? அல்லது முதலீடு செய்தவர்களுக்கு லாபத்தில் விகிதம் குறையத்தானே செய்யும்? அதனால் அதிக வட்டி செலுத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்வதை ரொம்ப யோசித்து முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக சுபிக்க்ஷா சிக்கலில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. அதற்கு சுபிக்க்ஷாவின் கடனும் ஒரு முக்கிய காரணம். அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் வட்டிக்கு செலவிட்டு, நடப்பு முதலீடு என்று சொல்லப்படும் அன்றாட தேவைக்கான Working Capital-ல் பாதிப்பு வந்து சுபிக்க்ஷா இன்று மூடப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று செய்திகள் வருகிறது. ஆக அளவுக்கதிகமான வட்டி ஒரு எச்சரிக்கை மணி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சில நிறுவனங்கள் தொழில் விருத்தி செய்ய புதிதாக கடன் வாங்கியிருக்கும். அதாவது புதிதாக ஒரு தொழிற்கூடம் அமைக்க கடன் வாங்கியிருக்கலாம். தொழிற்கூடம் என்பதை ஒரு நாளில் கட்டி முடித்து அடுத்த நாளே உற்பத்தி செய்து பொருட்களை விற்பனை செய்துவிட முடியாது. நிறுவனம் இருக்கும் தொழிலை பொறுத்து கட்டுமானத்திற்கான காலம் ஆறு மாதமோ, ஒரு வருடமோ அல்லது அதற்கு மேலாக கூட ஆகலாம். அதற்கு பிறகுதான் புதிய தொழிற்கூடம் உற்பத்தி ஆரம்பித்து விற்பனை கூடி அதன்மோலம் லாபமும் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், புதிய தொழிற்கூடம் உற்பத்தியை ஆரம்பிக்கும் முன்பும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டியிருக்கும் - விற்பனை கூடி இருக்காது. இது நஷ்டதிற்கோ அல்லது குறைந்த நிகர லாபத்திற்கோ வழிவகுக்கலாம். எனவே வட்டி கூடியிருக்கிறது என்றதும், நிறுவனம் மோசம் என்று முடிவு செய்து விடாமல், நிறுவனம் சம்மந்தப்பட்ட செய்திகளை படித்துப்பார்த்து நாம் புரிந்துகொள்ளலாம். எங்கே தகவல் கிடைக்கும்? அனைத்து நிறுவனங்களும் தமது தொழில் சம்மந்தப்பட்ட தகவல்களை பங்குசந்தைக்கு கொடுக்க வேண்டும். அதனால் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்க்கலாம்.
ஆக விற்பனை கூடி இருக்க வேண்டும், Operating Profit கூடி இருக்க வேண்டும், Extra-ordinary Items பற்றி கவனிக்க வேண்டும், வட்டி செலவை கவனிக்க வேண்டும். லாபநஷ்ட கணக்கு என்பது இதை எல்லாம் கடந்துதான் நிகர லாபம் என்ற நிலையை அடைகிறது. நிகர லாபம் விற்பனையில் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். உதாரணமாக சென்ற ஆண்டு விற்பனை 1,000 ரூபாயாக இருந்து நிகர லாபம் (Net Profit) 200 ரூபாய இருந்தால் நிகர லாபம் (Net Profit Ratio) 20 சதவிகிதம் என்று சொல்கிறோம் (200/1000x100). ஒவ்வொரு வருடமும் இந்த Net Profit Ratio என்பது கொஞ்சமாவது கூட வேண்டும். கூடாவிட்டாலும் குறையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் நிகர லாபம்தான் முதலீட்டளர்களுக்கான லாபம். இந்த லாபத்தில் ஒரு பகுதியை தான் முதலீட்டளர்களுக்கு நிறுவனம் Dividend என்ற பெயரில் வருடா வருடம் கொடுக்கும். மேலும் ஒரே தொழிலில் இருக்கும் இரண்டு வெவ்வேறு நிறுவங்களின் Net Profit Ratio-வை ஒப்பிட்டு பார்த்து இரண்டில் எந்த நிறுவனத்தின் Ratio அதிகமோ அந்த நிறுவனம் நன்றாக இயங்குகிறது என்று முடிவுக்கு வரலாம். இந்த ஒப்பீடு ஒரு வருடத்தை மட்டும் வைத்து செய்யாமல் குறைந்தபட்சம் 2 நிறுவனங்களின் 2 ஆண்டு கணக்கை வைத்து பார்க்க வேண்டும். இந்த மாதிரி ஒப்பிடுதல் (Comparison), Ratio கணக்கிடுதல் இவையெல்லாம் நிறுவனத்தின் லாபம் சம்பாதிக்கும் திறனை நாம் உணர்ந்துகொள்ள உதவும்.
இனி லாபநஷ்ட கணக்கில் கவனிக்க வேண்டிய மிக மிக முக்கியமான பகுதிக்கு நாம் வருகிறோம். அதுதான் EPS என்ற Earning Per Share என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், ஒரு பங்கு எவ்வளவு சம்பாதிக்கிறது என்பதை குறிக்கும் ஒரு சொல். EPS பற்றி பேச நிறைய விஷயங்கள் இருப்பதால் அடுத்த பதிவில் EPS பற்றி மட்டுமே எழுதலாம் என்றிருக்கிறேன்.
அதற்குமுன் இதை படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஒரு பங்கு வாங்குமுன் இவ்வளவு விஷயங்கள் பார்க்க வேண்டுமா என்று தோணலாம். பங்கு சந்தை முதலீடு என்பது நான் ஏற்கனவே கூறியதுபோல், ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் நமக்கு வருமானத்தை கொடுக்கும். அதனால் அடிப்படையில் நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுத்து வாங்கினால் நல்ல வருமானம் பார்க்க அதிக வாய்ப்பு உண்டு. நண்பர் திரு.சதுக்கபூதம் அவர்கள் என்னுடைய ஒரு பதிவிற்கு கீழ்க்கண்ட பின்னூட்டத்தை கொடுத்திருந்தார்.
//தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்துடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான் விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்//
மேற்கண்ட முன்னூட்டம் இன்றைய சில தரகர்கள் மற்றும் சிலரின் தவறான நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது (அனைத்து தரகர்களுமே தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள கூடாது). இந்த மாதிரி தவறான வழிகாட்டுதல்களை தவிர்க்க, நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்க நாம் நிறைய விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்ய வேண்டும். லாபம் சம்பாதிப்பதுதான் பங்கு சந்தை முதலீட்டின் ஒரே குறிக்கோள் என்றாலும், அதைவிட முக்கியமாக முதலீடு அழிந்து போகாமல் இருக்க வேண்டுமே...!!! அதற்க்காக இப்படி நிறைய விஷயங்களை அலசி பார்த்து, அடிப்படையில் வலுவாக இருக்கும் நிறுவனங்களின் (Fundamentally Strong Companies) பங்குகளை வாங்கினோமானால் நம் முதலீடும் பாதுகாப்பானதாக இருக்கும், வருமானமும் நன்றாக இருக்கும். எனவே நாம் ஏற்கனவே கூறிய விஷயங்களை எல்லாம் கவனித்தே ஆகவேண்டும்.
இனி அடுத்த பதிவில் EPS பற்றி மேலும் விரிவாக பார்ப்போம்.
No comments:
Post a Comment