You will make it....

You will make it....

Monday, September 14, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 12

இதுவரை வெளியான பதிவுகளில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, லாப-நஷ்ட கணக்கு, EPS, நிதிநிலை அறிக்கை, Promoters Holding, Bonus Share, நிறுவனம் சம்மந்தப்பட்டுள்ள தொழில், Mutual Fund மற்றும் FII வைத்திருக்கும் பங்குகள் போன்ற பல விஷயங்களை கவனித்தோம். இந்த பதிவில் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி பாப்போம்.

நாம் ஏற்கனவே பார்த்தது போல் நிதிநிலை அறிக்கை என்பது ஒரு குறிபிட்ட நாளில் ஒரு நிறுவனத்தின் சொத்து, கடன் மற்றும் முதலீடு சம்மந்தப்பட்ட விஷயங்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு வருட கடைசி நாளில் இது வெளியிடப்படும். ஒவ்வொரு காலாண்டு அறிக்கையிலும் இது வெளியிடப்படும். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் Reserves and Surplus என்று சொல்லப்படும், ஏற்கனவே ஈட்டிய லாபத்தில் இருந்து எதிர் காலத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தொகை. இந்த தொகையின் அளவை பொறுத்துதான் பங்கின் புத்தக மதிப்பு கணக்கிடப்படுகிறது. புத்தக மதிப்பு பற்றி ஏற்கனவே நாம் எழுதி இருப்பதால் இப்பொழுது அதை பற்றி அதிகம் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

இதை அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் கடன். Secured Loans, Unsecured Loans என்று இருக்கும். ஒரு நிறுவனத்திற்கு அதிக கடன் இருந்தால் அது சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை அல்லது பெரும் பகுதியை வட்டியாக கொடுக்க வேண்டிஇருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில், அது பங்குதாரர்களுக்கு வர வேண்டிய EPS ஐ குறைக்கும். EPS குறைந்தால், பங்கின் விற்பனை விலையும் குறையும் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதனால் ஒரு நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் பற்றிய விபரங்களையும் பார்க்க வேண்டும். மேலும், நிதி நிலை அறிக்கை என்பது ஓராண்டுக்கும் மேலாக அதாவது மூன்று அலல்து நான்கு ஆண்டுகளின் நிலை அறிக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்க்காக கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனால் கடந்த வருடத்துடன் நடப்பு ஆண்டு முடிவுகளை ஒப்பிட்டு பார்ப்பதும் நல்லது. கீழே ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை கொடுத்திருக்கிறேன்.





கடன் இருந்தால் பங்குதாரர்களின் EPS ஐ பாதிக்கும் என்பதால் கடனே இல்லாமல் இருக்கும் நிறுவன பங்குகளாக வாங்கலாமா என்று ஒரு கேள்வி வரும். அப்படி பட்ட அதாவது கடனே இல்லாத நிறுவன பங்குகளைதன் வாங்குகிறேன் என்று முடிவு செய்தோமென்றால் நிச்சயமாக பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது கனவாகவேதான் இருக்கும். ஏனென்றால், PTC போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கடன் இல்லாமல் இயங்குகிறது. மேலும் கடன் இருந்தால் நல்லது. என்ன? கடன் இருந்தால் நல்லதா..என்று நீங்கள் யோசிக்கிறது எனக்கு புரிகிறது.. நம்புங்கள் ... கடன் இருந்தால் நல்லது. எப்படி என்பதை பார்க்கலாம். பங்குதாரர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு 15 முதல் 20% வருமானம் எதிர்பார்ப்பார்கள். மேலும் பங்குதாரருக்கு தரப்படும் Dividend-கு வரி கழிவு நிறுவனத்திற்கு கிடையாது (வருமான வரி). ஆனால் வட்டிக்கு வரிக்கழிவு உண்டு. உதாரணமாக வட்டி பத்து சதவீதம் என்றால், வரி 30% கழித்து நிறுவனத்திற்கு உண்ண்மையான வட்டி வெறும் 7% தான். சரி இது எந்த விதத்தில் நல்லது? இதற்கு ஒரு உதாரணத்தை பாப்போம்.

ஒரு நிருவததிற்கு தேவையான முதலீடு இரண்டு லட்சம். இந்த முழு பணத்தையும் இருபதாயிரம் பங்குகளாக வெளியிட்டு குறிப்பிட்ட ஆண்டு லாபம் எண்பதாயிரம் சம்பாதிக்கிறது . அதற்கு வரி முப்பது சதவீதம் என்றால் வரிக்கு அப்புறம் உள்ள லாபம் ஐம்பத்தாறாயிரம் ருபாய். அதாவது EPS Rs.2.80 இதே நிறுவனம் ஒரு லட்ச ருபாய் பங்கு முதலீடாகவும், இன்னொரு ஒரு லட்ச ருபாய் கடனாகவும் (பத்து சதவீத வட்டி) முதலீட்டை பிரித்துக்கொண்டதேன்றால், இப்போது EPS எவ்வளவு என்று பாப்போம். வட்டிக்கு முந்தைய லாபம் எண்பதாயிரம், வட்டி பத்தாயிரம். ஆக நிகர லாபம் எழுபதாயிரம். அதற்கு வரி இருபத்தொன்றாயிரம் போக நிகர லாபம் நாற்பதொன்பதாயிரம். இருக்கும் பங்குகள் வெறும் பத்தாயிரம் மட்டும் என்பதால் EPS Rs.4.90. ௦ஆக கடன் வாங்கியதால், நிறுவனத்தின் EPS எவ்வளவு கூடி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். நம் எல்லோருக்கும் நன்றாக தெரியும் EPS கூடினால், பங்கின் சந்தை மதிப்பு கூடும் என்பது. ஆக கடன் இருப்பதும் நல்லதுதான் என்பது இந்த உதாரணத்தின் மூலம் தெரிய வருகிறது. அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், தகுதிக்கு மீறி கடன் வாங்கி, வட்டி செலுத்த முடியாத நிலை வந்தால் Sick Unit என்னும் பெயரோடு இந்த நிறுவனம் மூடப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மறக்க கூடாது.

நிதிநிலை அறிக்கையில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், Assets இருக்கும் பகுதியில் Miscellaneous Expenses Not Written Off என்று ஓன்று இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது என்ன என்பதை தெரிந்து கொண்டோமென்றால் அதை ஏன் கவனிக்க வேண்டும் என்பது தானாக புரியும். ஏன்கனவே செலவு செய்து அதை லாப நஷ்ட கணக்கில் செலவு என்று காட்டாமல் வைத்திருப்பதுதான் இது. அதனால், Networth அலல்து Book Value கணக்கிடும் போது இந்த தொகையை Reserves and Surplus இல் இருந்து கழிக்க வேண்டும்.

ஆக இதுவரை முதலீட்டுக்கான விஷயங்களை கவனித்தோம். இனி வர்த்தகம் (Trading) பற்றி அடுத்த பதிவுகளில் கவனிப்போம்.

பின் குறிப்பு : இடையில் கொஞ்ச நாட்களாக எழுதுவது தடைப்பட்டிருந்தது. இனி தடை இல்லாமல் வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை முடிக்கிறேன்.

No comments:

Page copy protected against web site content infringement by Copyscape