You will make it....

You will make it....

Wednesday, January 6, 2010

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 4)

சென்ற பதிவில் திட்டமிடுதல் பற்றி பார்த்தோம், மேலும் பங்கு வர்த்தகத்தில் Volume பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் Volume பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், ஒரு பங்கு விலை கூடும் முன் அதனுடைய Volume கூடும். Volume என்றால் தினசரி சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் மொத்த எண்ணிக்கை. பங்கு வர்த்தகத்தில் Volume ரொம்ப முக்கியமானது. ஏனென்றால் நல்ல Volume -இல் வர்த்தகமாகும் பங்குகளை வாங்கினால் லாபம் இருக்கும் போது விற்று காசாக்குவது எளிதாக இருக்கும். குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை வாங்கினோம் என்றால் அதை விற்பது கஷ்டமாக இருக்கும். எந்த ஒரு பங்குமே வர்த்தகமாகும் போது வாங்குபவர் ஒரு விலைக்கு கேட்பார் (Bid Price ), விற்பவர் அதைவிட கொஞ்சம் விலை கூட்டி கேட்பார் (Offer Price ). இந்த மாதிரி சூழ்நிலையில், சிலர் பங்குகளை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் விற்பவர் கேட்கும் விலைக்கு ஆர்டர் செய்து பங்குகளை வாங்கிக்கொள்ளுவார் அல்லது ஒருவர் கண்டிப்பாக பங்குகளை விற்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்தார் என்றால், வாங்குபவர் கேட்கும் விலைக்கு ஆர்டர் அனுப்பி தன்னிடம் இருக்கும் பங்குகளை விற்று விடுவார். ஆக வாங்குபவருக்கும் விற்பவருக்கும் ஒருவித Balance வரும்போது தான் வர்த்தகம் நடக்கும். ஒரு பங்கு Uptrend -இல் இருந்தால் விற்பவர் சொல்லும் விலைக்கு வாங்கிக்கொள்ளுவார்கள், ஏனென்றால் விலை இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில், கொஞ்சம் அதிகம் கொடுத்து வாங்கினாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வாங்குபவருக்கு இருக்கும், அதனால் கிடைக்கும் விலைக்கு வாங்கிக்கொள்ளுவார்கள். ஆக பங்கு உயரும் நிலையில் இருக்கும்போது விற்பவர் விலை நிர்ணயிக்கிறார். இதுவே ஒரு பங்கு Down Trend -இல் இருந்தால் நேர்மாறாக இருக்கும். வாங்குபவர்கள் அடிமாட்டு விலைக்கு பங்குகளை கேட்பார்கள் - அதாவது Down Trend -இல் இருக்கும் போது வாங்குபவர் கை ஓங்கி இருக்கும். சரி இதற்கும் Volume -கும் என்ன சம்மந்தம் என்று கேட்க தோன்றும். நல்ல எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகும் பங்குகளை விற்பவரும் சரி வாங்குபவரும் சரி அதிக வித்தியாசத்தில் கேட்க முடியாது, ஏனென்றால் அதிக எண்ணிக்கையில் பங்கு வர்த்தகமாவதால், விற்பவர் அதிக விலைக்கு Offer Price கேட்கிறார் என்றால், வேறொரு விற்கும் நபர் அதைவிட கொஞ்சம் குறைவில் Offer கொடுப்பார். அதனால் Bid -கும் Offer -கும் அதிக வித்தியாசம் அதிகம் இருக்காது, வர்த்தகம் எளிதாக இருக்கும். எளிது என்றால் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்று விடுவது எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு பங்கு நூறு ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கிறது என்றால், அதிக Volume இல்லாத பங்குகளின் அடுத்த பிட் தொண்ணூற்று ஐந்து ரூபாயா இருக்கலாம் Offer நூற்றி மூன்று ரூபாயாக இருக்கலாம். இந்த நிலையில் நம்மிடம் பங்குகள் இருக்கிறது என்றால் நாம் ஏற்கனவே வர்த்தகமாகி இருக்கும் நூறு ரூபாய்க்கு நம்முடைய பங்கை விற்பது மிக கடினமான காரியமாக இருக்கலாம் அல்லது சில நேரம் வேறு வழி இல்லாமல் தொண்ணூற்று ஐந்து ரூபாய்க்கே விற்க வேண்டிய சூழ்நிலை வரலாம். இதுவே அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகும் பங்குகள் என்றால் ஏற்கனவே வர்த்தகமான விலையை விட ஐந்து அல்லது பத்து பைசா வித்தியாசத்தில் அடுத்த வர்த்தகம் செய்துவிட முடியும். அதனால் நிறைய வர்த்தகம் ஆகும் பங்குகளில் வர்த்தகம் செய்வது நல்லது. எளிதாக வர்த்தகம் செய்ய முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்கை வாங்கவோ விற்கவோ ஆர்டர் செய்துவிட்டு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதனால் நாம் வேறு எந்த பங்கிலும் கவனம் செலுத்த முடியாமல் போவது மட்டுமல்லாமல் அதே பங்கை நல்லை விலைக்கு விற்கவோ வாங்கவோ முடியாமல் போகலாம். பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும் போது Time is Money என்று சொல்லுவது போல், ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், கொஞ்சம் கவனிக்காமல் இருந்தால் பங்கின் விலையில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பு உண்டு, அது நமக்கு சாதகமாக இருந்தால் நல்லது, பாதகமானால் நஷ்டம் அதிகமாக இருக்கும். அதனால் எப்போது பங்கை வாங்கினாலும் விற்றாலும் Limit order -இல் தான் வர்த்தகம் செய்ய வேண்டும். Limit order என்றல், நாம் ஒரு பங்கை வாங்கும் போது நாம் கேட்கும் விலையை குறிப்பிட்டு order செய்ய வேண்டும். இப்படி Limit Order இல்லை என்றால், நாம் பங்குகளை வாங்கும் போது அதிக Bid Price என்ன விலையில் இருக்கிறதோ அந்த விலையில் நமக்கு பங்கு கிடைக்கும், இதுவே Limit Order இல்லாமல் விற்கிறோம் என்றால் இருப்பதிலேயே மிக குறைந்த Bid Price இல் தான் நமக்கு விற்பனை ஆகும். எனவே Limit Order என்பது முக்கியம். நாம் விலை குறிப்பிடாமல் செய்யும் Order -ஐ Market Order என்று சொல்கிறோம்.

இது மட்டுமில்லாமல், அதிக எண்ணிக்கையில் வர்த்தகம் ஆகாத பங்குகளில் உள்ள இன்னொரு Risk என்னவென்றால், திடீரென பங்கின் விலை குறைந்தால் (உதாரணம்: துபாய் பொருளாதார சிக்கலில் இருக்கிறது என்ற செய்து வந்த வெள்ளிக்கிழமை, பங்குச்சந்தை தலை கீழாக விழுந்தது நினைவிருக்கலாம்) நம்மிடம் இருக்கும் பங்குகளை நாம் நினைக்கும் விலைக்கு விற்க முடியாது, அதனால் நஷ்டத்தை குறைக்க கிடைக்கும் விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை வரும் - நஷ்டம் அதிகமாக இருக்கும். ஆக ஒரு நாளைக்கு எத்தனை பங்கு விற்பனை ஆகிறது (Volume ) என்னும் விஷயம் எவ்வளவு முக்கியம் என்று மேலே கூறிய காரணங்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இனி Volume எப்படி விலை உயர்வை அல்லது விலை குறைவதை நமக்கு உணர்த்தும் என்பதை இனி பார்ப்போம்.

பொதுவாக ஒரு பங்கு விலை கூடும் என்ற எதிர்பார்ப்பு வந்ததுமே அனைவரும் அந்த பங்கை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் பங்கு சந்தையில் வாங்குபவர்களின் எண்ணிக்கையும், வாங்குவதற்காக கேட்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையும் (Bid Quantity) கூடும். அதாவது சந்தையில் குறிப்பிட்ட அந்த பங்கின் Demand கூடும். எந்த ஒரு பொருளுக்குமே Demand கூடினால், விற்பவர் விலையை கூட்ட ஆரம்பிப்பார் அதனால் அந்த பொருளின் விலை கண்டிப்பாக உயரும் - இது பங்கு சந்திக்கும் பொருந்தும், காய்கறி சந்திக்கும் பொருந்தும். பங்கு சந்தை-ஐ பொறுத்த வரை, முதலில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை கூடும் போது விலை கொஞ்சம் உயர ஆரம்பிக்கும், அடுத்து தொடர்ந்து வாங்குபவர்களின் ஆர்வம் கூடுவதால் விற்பவர் கையில் சந்தையின் பிடி இருக்கும் - அதாவது விலையை கூட்டுவார்கள், விலை கூடினாலும், அந்த பங்கின் மேல் இருக்கும் ஆர்வத்தால், வாங்குபவர்களும் ஓரளவு அதிக விலைக்கே வாங்குவார்கள், இதனால் தொடர்ந்து பங்கின் விலை மூன்று முதல் ஐந்து நாட்கள் குறைந்த பட்சமாக கூடும். நாம் இந்த சூழ்நிலையை கவனிக்க வேண்டும், கூட ஆரம்பிக்கும் போது வாங்கி, ஓரளவு லாபம் வந்ததும் விற்றுவிட்டு வெளியேறி விடவேண்டும். இதற்கு நாம் விற்பனை இலக்கு வைத்திருக்க வேண்டும். அது வாங்கிய விலையில் இருந்து 5 % ஆக இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட விலை உயர்வாக இருக்கலாம், எப்படி இருந்தாலும், இலக்கு வைத்து வர்த்தகம் பண்ண வேண்டும். இலக்கை எட்டியது விற்றுவிட வேண்டும், இப்படி செய்தால் மட்டுமே வர்த்தகத்தில் லாபம் பார்க்க முடியும். இப்படி செய்யாமல் விலை கூடுகிறது என்று வைத்துக்கொண்டிருந்தால், விலை கூடும் போதும் நாம் பார்த்துக்கொண்டே இருப்போம், அதே போல் விலை அடுத்து வரும் நாட்களில் கீழே வரும்போதும் பார்த்துக்கொண்டே இருப்போம். இப்படி பார்துக்கொண்டிருக்கவா வர்த்தகம் செய்கிறோம்? பங்குகளை வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் வாங்கிய பங்குகளை சரியான நேரத்தில் விற்பது. நிறைய பேர் வாங்கும்போது காட்டும் அக்கறையை விற்கும்போது காட்டுவதில்லை. அதனால் லாபம் என்பது கைக்கு வராமல் போகிறது.

இந்த பதிவில் Volume பற்றி ஓரளவு பார்த்திருக்கிறோம், Volume சம்மந்தமான முக்கியமான விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

பின் குறிப்பு : சென்ற பதிவில் நாம் குறிப்பிட்டிருந்த Jaiprakash Hydropower பங்கின் விலை இப்போது எவ்வளவு என்று கவனித்தீர்களா????

Sunday, January 3, 2010

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 3)

PLAN A TRADE, TRADE THE PLAN

திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கு பற்றி பார்த்தோம். லாப இலக்கு பற்றி முடிவு செய்யும் முன் பங்குகளில் ஏற்ற இறக்தத்தை பற்றி தெரிந்து கொள்ளுவது நல்லது. பொதுவாக எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதுமில்லை தொடர்ந்து இறங்கிக்கொண்டே இருப்பதுமில்லை. விதிவிலக்காக ஏதாவது செய்தியின் அடிப்படையில் தொடர்ந்து ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கலாம். ஒரு பங்கு குறைந்தபட்சமாக 3 முதல் 5 நாள் ஏற்றத்தில் இருக்கும் அதேமாதிரி இறக்கத்திலும் இருக்கும். வர்த்தகம் செய்யும் போது அந்த 3 முதல் 5 நாட்களில் லாபத்தை சம்பாதிக்க வேண்டும். இதெல்லாம் நல்லாத்தான் இருக்குது - ஆனா எப்போ ஏறும் எப்போ இறங்கும் என்பது எப்படி தெரியும்? இது விஷயமாக வரும் பதிவுகளில் பார்க்கலாம். அதற்கு முன் திட்டமிடுதலை பார்ப்போம். லாப இலக்கு என்பது குறிப்பிட்ட சதவீதமாக இருக்கலாம் (ஒரு நாளைக்கு ௨% அல்லது பங்கின் Resistance -ஐ அடிப்படையாக வைத்து லாப இலக்கு நிர்ணயிக்கலாம்). லாப இலக்கு இல்லாமல் வர்த்தகம் என்பது கண்ணை கட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்வது போல. ஒரு வேலை பத்திரமாக கரை சேரலாம் அல்லது காட்டுக்குள்ளே தொலைந்தே போகலாம்... எனவே லாப இலக்கு அத்தியாவசியம்.

இனி திட்டமிடுதலில் அடுத்து பார்க்க வேண்டியது "சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்" என்பது. நாம் எவ்வளவுதான் கவனமாக பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கினாலும், திடீரென ஏதாவது ஒரு செய்தியை வைத்து பங்குகளின் விலை தற்காலிகமாக குறைய வைப்பு உண்டு. அந்த மாதிரி நேரத்தில், நம்முடைய சொந்த பணம் என்றால், பங்கின் விலை ஏறும் வரை பங்குகளை வைத்து கொண்டிருக்கலாம், இதுவே கடன் வாங்கிய பணம் என்றால் திருப்பி செலுத்த வேண்டுமே என்னும் பிரச்சினையினால் நஷ்டத்திற்கு பங்குகளை விற்க வேண்டுய சூழலுக்கு நாம் தள்ளப்படலாம், அதனால் என்றுமே சொந்த பணத்தில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, "குறைந்த பணத்தில் வர்த்தகம் ஆரம்பிக்க வேண்டும்". ஏனென்றால், அனுபவம்தான் ஆசான் என்று சொல்வதுபோல், நாம் நம்மால் தாங்க முடிந்த நஷ்டத்தின் அளவில் குறைந்த பணத்தில் வர்த்தகம் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகத்தின் அளவை கூட்டலாம். இதை ஏன் சொல்கிறேன் என்தால் ஒருவேளை நம்முடைய வர்த்தகம் நாம் நினைத்த மாதிரி லாபத்திற்கு வரவில்லை என்றால், நஷ்டம் நம்மால் தாங்க முடியும் அளவில் இருக்கும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், "பங்குகளை வர்த்தகம் செய்யுங்கள், காதல் கொள்ளாதீர்கள்". எந்த பங்குமே எப்பொழுதுமே கூடிக்கொண்டே இருப்பதில்லை. அதனால் ஒரு பங்கில் ஓரளவு லாபம் பார்த்த பின், அடுத்த முறை வாங்கும்போது இது இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பதை கவனித்துதான் வாங்க வேண்டும். எனக்கு இந்த நிறுவனம் பிடிக்கும், இது நல்ல நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு வர்தகதிர்க்காக மீண்டும் மீண்டும் வாங்குவது சரியல்ல, இதனால் நீங்கள் போட்ட பணம் அந்த பங்கில் முடங்கிப்போக வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் அடிப்படையே, அடிக்கடி வாங்கி விற்றுக்கொண்டிருக்க வேண்டும். நல்ல நிறுவனமாக இருக்கலாம், அனால் குறுகிய காலத்தில் அது லாபம் தரக்கூடியதாக இருக்காது. நீண்ட காலத்தில் நல்ல பண்ணுகள் அனைத்துமே குறிகிய கால வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே எனக்கு இந்த பங்கு பிடிக்கும் என்று எந்த ஒரு பங்கையும் காதல் கொள்ளாதீர்கள்.

"அடுத்த நாள் வர்த்தகத்திற்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்". தினமும் சந்தை முடிந்ததும் அடுத்தநாள் எந்தெந்த பங்குகளை வர்த்தகம் செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் பங்குகளில் எதை விற்கலாம், விற்ற பணத்தில் வேறு எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை Select செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சந்தை நடக்கும் போது திடீரென்று நான் இந்த பங்கை வாங்கபோகிறேன் என்று முடிவு எடுப்பது அனேகமாக சரியாக இருப்பதில்லை. எப்படி தேர்ந்தெடுப்பது என்பது வரும் பதிவுகளில் பாப்போம்.

"அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்". பங்கு பரிந்துரை செய்வதற்கென்றே நிறைய வலைத்தளங்கள் இருக்கிறது. மாதம் இவ்வளவு பணம் காட்டுங்கள் நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று நிறைய தளங்கள் சொல்கின்றன. பரிந்துரைகளை கண்மூடித்தனமாக Follow பண்ணுவது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். அடுத்தவர்கள் சொல்லும் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளுங்கள், அதை அப்படியே செயல்படுத்தாமல் நீங்கள் அந்த பங்கின் Chart -ஐ பார்த்து நீங்களே முடிவு செய்து வர்த்தகம் செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ உங்களது செயல்பாட்டுக்கு நீங்களே பொறுப்பு என்ற மனப்பான்மையை முதலில் இருந்தே வளர்த்துக்கொள்ளுங்கள். நஷ்டமடைந்தால் அடுத்தவர் மீது பழி போடுவதில் எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பணம் உங்களுடையது, அதை பாதுக்காக்க வேண்டியதும், பன்மடங்காக பெருக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு. அடுத்தவரை குறை கூறினால் நாம் இழந்த பணம் திரும்ப வரப்போகிறதா???

"லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள்". வர்த்தகத்தில் லாபம் நஷ்டம் என்பது இல்லை, Winning Trade அல்லது Losing Trade என்ற இரண்டு மட்டும் தான் உண்டு. வெற்றி தோல்வி மட்டுமே குறிக்கோள். நாம் நிர்ணயித்த லாபம் வந்தால் அது வெற்றி, ஒரு வேளை நாம் நினைத்த மாதிரி பங்கின் விலை கூடாமல், இறங்க ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட அளவு நஷ்டத்தில் விற்றுவிடுவது நல்லது. இதை Stop Loss என்று சொல்கிறோம். பங்கின் விலை ஏறும் என்று நினைத்து மேலும் மேலும் விலை இறங்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை விட, இறங்குகிறது என்று தெரிந்ததும், விற்று கொஞ்சம் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதனால் இரண்டு வித பலன் உண்டு. முதலில் அதிக நஷ்டத்தை தவிர்த்துவிடலாம், இன்னொன்று விற்று வந்த பணத்தை வைத்து அடுத்த பங்கை வாங்கி இழந்த லாபத்தை சரி கட்டி விடலாம். எனவே ஸ்டாப் லாஸ் என்பது அத்தியாவசியமானது.

ஒரு பங்கை வாங்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டால், உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதை வாங்க வேண்டும். உங்களுடைய Analysis -இல் உங்களுக்கு முழு திருப்தி இல்லை என்றால், அந்த பங்கை வாங்காமல் வேறு பங்குகளை கவனியுங்கள்.

நீங்கள் செய்யும் வர்த்தகத்தை தினமும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் (Record Keeping). இது ஏனென்றால், நேரம் கிடைக்கும்போது நாம் ஏற்கனவே செய்த வர்த்தகங்களை ஒரு Review செய்து பார்ப்பது நல்லது. அப்படி பார்க்கும் போது, நாம் லாபம் சம்பாதித்த பங்குகளுக்கும் நஷ்டமடைந்த பங்குகளுக்கும் Technical Indicators -இல் என்னென்ன வித்தியாசம் இருந்தது, நாம் எங்கே தவறு செய்தோம் போன்றவை நமக்கு புரியும். இது மிகமிக அத்தியாவசியமானது. எனவே, உங்களுடைய வர்த்தகத்திற்கான Record உங்களிடம் இருக்கவேண்டும். ரொம்ப எளிதான விஷயம் இது. பங்கு வாங்கிய மற்றும் விற்ற தேதி, பங்குகளின் எண்ணிக்கை, வாங்கியவிலை, விற்றவிலை, Brokers Commission , லாப-நஷ்டம் போன்ற விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

திட்டமிடுதலில் கடைசியாக கவனிக்க வேண்டியது, பண நிர்வாகம் (Money Management). இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் ஸ்டாப் லாஸ். அதிக நஷ்டத்தை தவிர்பதற்காக பங்கின் விலை குறைகிறது என்று தெரிந்ததும், ஒரு குறிப்பிட்ட நஷ்டத்தில் பங்கை விற்று, அதிக நஷ்டத்தை தவிர்ப்பது - இது பற்றி ஏற்கனவே பதுவிட்டோம். Stop Loss -ஐ அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, சில நேரம் நாம் வாங்கிய பங்கு, விலை கூடவும் செய்யாமல், குறையவும் செய்யாமல் ஒருவித Flat -ஆக இருக்கும். இதை ஆங்கிலத்தில் Empty Zone என்று சொல்லுவார்கள். இந்த மாதிரி எம்ப்டி ஜோன்-இல் இருக்கும் ஒரு பங்கை நாம் விற்றால் லாபமும் இருக்காது அதே நேரம் அதிக நஷ்டமும் இருக்காது. அதாவது பங்கின் விலை நம்முடைய லாப இலக்கிற்கும் வரவில்லை, Stop Loss அளவையும் தொடவில்லை. இந்த மாதிரி Empty Zone (EZ ) -இல் இருக்கும் பங்கு சந்தையின் போக்கை அடுத்து, திடீரென விலை கூடலாம் அல்லது விலை வேகமாக குறையவும் செய்யலாம். அதனால் EZ -இல் இருக்கும் பங்கை முடிந்தவரை விற்று நம்முடைய முதலை கையில் எடுத்துவிடுவது நல்லது. கீழே இருக்கும் chart-ஐ பாருங்கள், இது Jaiprakash Hydropower பங்கின் தற்போதைய Chart. கண்டிப்பாக இது EZ -இல் இருக்கிறது. இந்த பங்கு Rs .76 /-ஐ தாண்டினால் வாங்கலாம் அல்லது Rs .72 /-ஐ விட குறைந்தால் Down Trend என்று முடிவு செய்யலாம், அதுவரை இந்த பங்கில் வர்த்தகம் என்பது கவனமாக இருக்க வேண்டும். EZ -ஐ ஒரு பங்கு நல்ல Volume (தினம் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை) உடன் தாண்டினால், பங்கின் விலை கூடும், EZ -ஐ தாண்டுகிறது என்று அர்த்தம், அபப்டி இல்லாமல் வழக்கமான Volume இருந்தால், பங்கின் விலை கூடும் என்று சொல்ல முடியாது, மீண்டும் EZ -இல் இருக்க வாயப்பு உண்டு. (கீழே இருக்கும் chart -இன் கீழ்பகுதியில் இருக்கும் Histogram தான் தினசரி Volume). Empty Zone-இல் ஒரு பங்கின் விலை எப்படி இருக்கிறது என்பதை கீழே இருக்கும் Chart -இல் பார்க்கலாம்.




ஏற்கனவே பார்த்தது போல் EZ-இல் ஒரு பங்கு நமக்கு அதிக லாபமும் தராது, அதிக நஷ்டமும் தராது, இந்த சூழ்நிலையில், அந்த பங்கை விற்றுவிட்டு, அடுத்த பங்கை பார்ப்பது நல்லது. இனி பங்கின் விலைக்கும் Volume -கும் என்ன தொடர்பு, அது எப்படி ஒரு பங்கை வாங்குவது அலல்து விற்பதற்கு பயன்படும் என்பதை அடுத்த பதிவில் பாப்போம்.
Page copy protected against web site content infringement by Copyscape