You will make it....

You will make it....

Thursday, February 12, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 3

முந்தைய பதிவில் Demat பற்றி பார்த்தோம். பங்கு சந்தையில் பங்குகளை வாங்க விற்க Demat தேவை என்பதை பற்றி பார்த்தோம். இனி பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வது சம்மந்தமாக சில விஷயங்களை பார்ப்போம்.

பங்கு சந்தை என்றதுமே எல்லோருக்கும் அது ஒரு பணம் காய்க்கும் மரம் என்ற எண்ணமே வருகிறது. அது எவ்வளவு தூரம் உண்மை என்பது நாம் நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப்போகிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும். பங்கு சந்தையில் கீழ்க்கண்ட மூன்று விதமாக சம்பாதிக்கலாம்.

1. நீண்ட கால முதலீடு
2. குறுகிய கால முதலீடு
3. தின வர்த்தகம்

1. நீண்ட கால முதலீடு (Long-term Investment) :
ஒரு நிறுவனத்தில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால், அந்த நிறுவனம் வளர வளர நம்முடைய முதலீடும் வளரும். நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைதான் செய்வார்கள். பணத்தை முதலீடு செய்துவிட்டு குறைந்தபட்சம் மூன்று வருடம் காத்திருப்பார்கள். மூன்று வருடம் என்பது நிர்ணயிக்கப்பட்ட காலம் இல்லை. அது மூன்று வருடமாக இருக்கலாம் அலல்து அதற்கு மேலும் இருக்கலாம். சிலர் பத்து வருடம் கூட காத்திருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் அந்த முதலீடு நல்ல லாபத்தை தரும். உதாரணமாக இன்போசிஸ் நிறுவன பங்கில் 2002-ல் ஒரு பங்குக்கு 458 ரூபாய் முதலீடு செய்திருந்தால் 2007 இல் 2337 ரூபாய் கிடைத்திருக்கும் - யோசித்து பாருங்கள் நான்கு மடங்குக்கு மேல் வருமானம். இது தான் முதலீடு செய்வதில் இருக்கும் பயன். இப்படி வருடக்கணக்காக காத்திருக்க யாருக்கு பொறுமை இருக்கிறது என்று கேட்கிறீர்களா?? அப்படியானால் நீங்க கீழே உள்ள ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. குறுகிய கால முதலீடு (Short, Medium-term Investment) :
இந்த வகை முதலீட்டாளர்கள் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றமாதிரி பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்பார்கள். இந்த குறுகிய காலம் என்பதற்கு எவ்வளவு காலம் என்று சொல்ல முடியாது. சில நேரம் ஒரு வருடம் இருக்கலாம், சில நேரம் ஆறு மாதம் இருக்கலாம், அவ்வளவு ஏன்? ஒரு வாரம் கூட இருக்கலாம். அதாவது பங்குகளை வாங்கி ஒரு வாரத்திற்குள்ளாக கூட விற்று விடுவார்கள்.

3. தின வர்த்தகம் (Day trading):
இந்த முறையில் தினமும் காலையில் பங்குகளை வாங்கி அன்று மாலை பங்கு சந்தை முடியும் முன் விற்று விடுவார்கள். இதில் காலையில் வாங்கத்தான் வேண்டும் என்பதில்லை, காலையில் விற்று விட்டு - நம்மிடம் பங்கு இல்லாமலேயே விற்றுவிட்டு - அன்றைய தினம் முடியும் முன் திரும்ப வாங்கி, வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள வித்தியாசத்தில் லாபம் பார்பார்கள். இது மிக மிக ரிஸ்க் ஆன ஒரு விஷயம். தின வர்த்தகத்தில் அதிக லாபம் பார்க்கலாம் என்று நினைக்கும் நாம் அதே அளவுக்கு நஷ்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கே ரிஸ்க் அதிகமோ அங்கே லாபம் (return) அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இப்படி மூன்று வகையில் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யலாம் என்று இருக்கும் போது எது நல்லது என்ற கேள்வி வரும். நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.

நீண்டகால முதலீட்டை தவிர பிற இரண்டு வகையையும் வர்த்தகம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் trading என்று சொல்கிறோம். இந்த வகையில் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறவர்களின் ஒரே குறிக்கோள், விலை கூடியதும் இந்த பங்கை விற்று லாபம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான். இங்கே நாம் பங்கு வாங்கியிருக்கும் நிறுவனம் நல்லபடியாக தொழில் செய்யவேண்டும், அந்த நிறுவனம் லாபம் பார்க்க வேண்டும், அந்த லாபத்தின் மூலமாக நம்முடைய பங்கின் விலை கூட வேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், அப்போது இருக்கும் செய்தி மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் லாபம் பார்க்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

முதலில் நீங்க என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் என்பதை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற மாதிரி நம்முடைய திட்டமிடலும் இருக்க வேண்டும். நீங்கள் முதலீட்டாளராக விரும்புகிறீர்களா அல்லது வர்த்தகராக விரும்புகிறீர்களா என்று முடிவு செய்வதற்கு முன் நாம் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். தெரிந்துகொண்ட பிறகு நீங்களே முடிவு செய்யலாம்...!!

பங்கு சந்தையில் பணத்தை போடும் முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமுன் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஓன்று. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். எப்படி நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வது? இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும். அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக இன்போசிஸ் மென்பொருள் துறையில் இருக்கிறது என்பது போல், நாம் வாங்க நினைக்கும் நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த தொழிலின் எதிர்கால வாய்ப்புக்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய சூழ்நிலையில் மென்பொருள், ஏற்றுமதி சம்மந்தப்பட்ட தொழில் கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகும் என்று நமக்கு தெரியும். அதே மாதிரி, உள்கட்டமைப்பு, பவர் மற்றும் FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும்/விற்கும் தொழில் அதிக பாதிப்புக்குள்ளகாது என்று சொல்லப்படுகிறது.

இப்படி நிறுவனம் செய்யும் தொழில் மற்றும் அது இருக்கும் துறையை பற்றி தெரிந்தபின், குறிப்பிட்ட நிறுவனம் எப்படி செயல் படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அந்த நிறுவனத்தின் நிதி விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அந்த நிறுவனத்தின் வருடாந்திர லாப நஷ்ட கணக்கு (Profit and Loss Account) மற்றும் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கையில் நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை வரும் பதிவில் பார்ப்போம்.

4 comments:

ஷாஜி said...

மிக்க நன்றி

Tech Shankar said...

Thanks dear dude

சதுக்க பூதம் said...

நல்ல முயற்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்

//இதற்குத்தான் செய்தித்தாள் மற்றும் பங்குச்சந்தை சம்மந்தப்பட்ட வலைத்தளங்களை பார்க்க வேண்டும்.//

தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்டுடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான் விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

//லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கையில் நாம் என்னென்ன கவனிக்க வேண்டும் என்பதை வரும் பதிவில் பார்ப்போம். //

பதிவை படிக்க ஆவலுடன் காத்துள்ளேன்

Kalyan said...

((சதுக்க பூதம் said...
தற்போது இடை தரகர்கள் மற்றும் சிலர் உள் நோக்கத்டுடன் தவறான செய்திகளை பரப்புவது வாடிக்கையாகி விட்டது. செயற்கையான் விலை ஏற்றத்திற்கு இது போன்ற செய்தி தாள்களை உபயோக படுத்துகிறார்கள். சிறு முதலீட்டாளர்கள் இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்))

வருகைக்கு நன்றி திரு சதுக்க பூதம் அவர்களே. வரும் பதிவுகளில் இந்த மாதிரி விஷயங்களை பற்றி கண்டிப்பாக எழுதுவேன்.

Page copy protected against web site content infringement by Copyscape