You will make it....

You will make it....

Monday, February 28, 2011

பங்குசந்தையும் திருமண வாழ்க்கையும்

ரொம்ப நாள் ஆகி போச்சி, பதிவு எழுதி. அதனால், இனி வாரம் ஒரு பதிவு போடலாம்னு ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன், புது வருட தீர்மானம் போல் இல்லாமல் உண்மையாகவே வாரம் ஒரு பதிவு கண்டிப்பா எழுதிடலாம்னு இருக்கேன். சரி இது வரை நம் வலைத்தளத்தில் இருக்கும் பதிவுகளை ஒருமுறை ஒரு Review பண்ணிடுங்க, நானும் continuity -ஐ miss பண்ணாமல் வாரம் ஒரு பதிவு இடுகிறேன்.

அதற்கு முன், ஒரு சின்ன Fresh -up பதிவு. ச்சும்மா ஜாலியா...!!!

இந்த பதிவுக்கும் பங்கு சந்தைக்கும் தொடர்பில்லைன்னு நினைக்க கூடாது. கண்டிப்பா தொடர்பு உண்டு. அதனால் relax -ஆ படிங்க.

இந்த பதிவு, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகப்போகும் ஆண்களுக்காக. (இது எல்லாமே சொந்த சரக்கு இல்லை, நெட்-இல் அங்கங்கே படிச்சதையும் சேர்த்திருக்கிறேன்..). வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு தவிர்க்க முடியாத விபத்து.. அதை அனேகமாக அனைவரும் சந்திச்சிதான் ஆகணும். ஒரு சிலர் ரொம்ப அதிர்ஷ்டசாலி-யா இருப்பாங்க நம்ம வாஜ்பேயி, அப்துல்கலாம், தமிழகத்தில் இல.கணேசன் இவங்களை மாதிரி. இருந்தாலும் திருமணம் என்பது தவிர்க்க முடியாதது தான். அது ஒரு விளக்கு என்றால் ஆண்களெல்லாம் விட்டில் பூச்சி மாதிரி. கல்யாண வயதில் எப்படியும் கல்யாணம் செய்தே ஆகணும்னு துடியா துடிப்பாங்க... அதாவது விட்டில்பூச்சி விளக்கு வெளிச்சத்தில் விழ ஆசைப்படுவதை போல...விழுந்தப்புறம் விட்டில்பூச்சி நிலை என்னன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..!!! ஏன் அப்படி சொல்றேன்னா, கல்யாணம் ஆகும் வரை ஆண் என்பவன் பாதி மனிதன் தான், கல்யாணம் ஆனபிறகு ....He is finished ...!!! அட அப்படி எல்லாம் இல்லைப்பா, நாங்களெல்லாம் still alive -னு என்னை மாதிரி நிறைய பேர் சொல்லுவாங்க.. அவங்களும் இதை கண்டிப்பா படிக்கணும். ஏன்னா, still alive -னு சொல்றதை விட happily living -னு சொல்லணுமே.. அப்படி சொல்லணும்னா அதுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது (பங்குச்சந்தை Trading Rules மாதிரி).

முக்கியமான விதி என்னன்னா, சாப்பிடும் போது சமையலின் சுவை எப்படி இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்குதுன்னு கண்டிப்பா பாராட்டணும். அப்படி பாராட்டும் போது தலையை குனிஞ்சிகிட்டே பாராட்டிட்டா ரொம்ப நல்லது... முகத்தில் இருக்கும் வலி மனைவிக்கு தெரியாது பாருங்க...!!! (பி.கு.: வீட்டில் மனைவி சமைப்பதாக இருந்தால் மட்டுமே இது பொருந்தும்). இந்த சமையல்னு வரும்போது அது பற்றி நிறைய பேசணும். கொடுக்கும் குழம்பு மஞ்சள் நிறத்தில் இருந்தால் நீங்க உடனே இது பருப்பு குழம்புன்னு முடிவு பண்ணிட கூடாது. அந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் வஸ்து, கொஞ்சம் கெட்டியாக இருந்தால் அது பருப்பு குழம்பு, அதில் நிறைய அல்லது ஓரளவு காய்கறிகள் இருந்தால் அதுக்கு பேர் சாம்பார், அதுவே வெறும் தண்ணி மாதிரி இருந்தால் அதுக்கு பேர் ரசம். அதனால் நிறத்தை வைத்து தவறான முடிவு எடுத்து குழம்பின் பேர் சொல்லாமல், நிதானமாக ஆராய்ச்சி செய்து பாராட்டினால் மோசமான பின்விழைவுகளை கணிசமாக குறைக்கலாம் (அதுதாங்க Stop Loss மாதிரி).

புத்தாடை எடுக்க ஜவுளிக்கடைக்கு நீங்களும் உங்கள் மனைவி கூட போய் இருந்தால், அவங்க ஏதாவது ஒரு புடவை எடுத்து (அதுக்கே எவ்வளவு நேரம் ஆகும் என்பது வேறு விஷயம்... சில சந்தர்பங்களில் வாங்கிய ஷேர் அப்படியே Empty Zone -இல் இருப்பது போல் நீங்க ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டும்) ஏங்க இது நல்லா இருக்குதான்னு கேட்டாங்கன்னு வைங்க, உடனே ரொம்ப அழகான செலக்க்ஷன், உனக்கு இது ரொம்ப அருமையா இருக்கும்னு சொல்லி பாராட்டி டக்-னு பில் போட கூட்டிட்டு போய்டணும். இதுதான் நல்ல கணவனுக்கும் அழகு, நல்லா இருக்கணும்னு நினைக்கும் கணவனுக்கும் அழகு. அதை விட்டுட்டு இது உனக்கு அவ்வளவு நல்லா இருக்காதே, வேறே ஏதாவது பாரேன்னு சொல்லிட்டீங்கன்னா, மீண்டும் நீங்க ஒரு Empty Zone -இல் இருக்க வேண்டிய சூழ்நிலை வரும், அது மட்டுமல்ல, ஏங்க உங்களுக்கு பிடிக்கலைன்னு சொன்னீங்களே அந்த புடவை எனக்கு பிடிசிருப்பதால், எனக்காக அதையும், உங்களுக்கு பிடிக்கிற மாதிரி இதையும் சேர்த்து ரெண்டு புடவை எடுத்துட்டேங்கன்னு சொல்லி உங்களை மயக்கமடைய வைக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம். (Empty Zone தாண்டி ஷேர்-இன் விலை கீழே விழுவதை போல ஒரு சூழ்நிலை இது... அப்படி விழும்போது நம்மால் எப்படி எதுவுமே செய்ய முடியாதோ அதைப்போல் ஆண்களான நம்மால் இந்த சூழ்நிலையில் எதுவுமே சொல்ல முடியாது....)

அடுத்து, வேலைக்கு போய்ட்டு நீங்க உங்க வீடு இருக்கும் தெருவில் நுழையும்போதே நல்ல சமையல் வாசம் அடிச்சதுன்னு வைங்க, நீங்க ரொம்ப கவனமா இருக்கணும், ரொம்ப
Alert -ஆ மனதை திடப்படுத்திக்கணும். அப்படி திடப்படுத்தப்பட்ட மனதோட அடிமேல் அடி வைத்து உங்க வீட்டை நீங்க நெருங்க நெருங்க சமையல் வாசம் இன்னும் கூடினால், நீங்க கலங்க கூடாது. இந்த வாசம் நம் வீட்டில் இருந்து வருதுன்னு நினைச்சி சந்தோஷ பட்டுடவும் கூடாது, நம் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்து வருதோன்னு.... வருத்தப்பட்டுடவும் கூடாது. உங்க வீட்டிலிருந்து வந்தால் அதில் சந்தோஷத்தை விட கண்டிப்பா உங்க purse -இன் எடை வேகமா குறையப்போகுதுன்னு அர்த்தம், ஏன்னா உங்க மனைவி குடும்பத்தில் உள்ளவர்கள் விருந்துக்கு வந்திருப்பார்கள், அந்த மாதிரி நாட்களில் மட்டுமே நீங்க உங்க கல்யாண வாழ்க்கையிலேயே கண்டறியாத சுவையும், வாசமும் மிகுந்த சாப்பாடு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். நல்லா கவனிங்க வாய்ப்புகள் அதிகம்னுதான் சொன்னேன், கண்டிப்பா கிடைக்கும்னு சொல்ல முடியாது. கிடைக்குமா இல்லியா என்பது நீங்க வீட்டில் நுழையும் நேரத்தை பொறுத்து. Late -ஆ வீட்டுக்கு வந்தால் வீட்டில் வாசம் மட்டுமே இருக்கும், உங்களுக்கு வழக்கம் போல், சாதமும், மஞ்சள் கலரில் தண்ணியா இருக்கும் வஸ்துவும் கிடைக்கும்னு நம்பலாம் (Entry Level எவ்வளவு முக்கியம்னு இதை வச்சி தெரிஞ்சிக்கலாம். Late Entry -இல் லாபம் குறைவு, சில நேரம் கிடைக்காமலே போகலாம்) இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் நீங்க பொறுமையை கண்டிப்பா கடைபிடிக்கணும். இதை எல்லாம் மனதில் வைத்துதான் வள்ளுவர் சொல்லி இருக்கார், "யாகாவாராயினும் நாகாக்க...காவாக்கால் - - - - - பட்டு"..ன்னு..

மனைவி வீட்டிலுள்ளவர்கள்னு சொல்லும்போது மச்சினி நினைவுக்கு வந்திருக்குமே உங்களுக்கு? மச்சினி என்பது Futures and Options Trade பண்ற மாதிரி High Risk Area. மச்சினியிடம் பேசலைன்னா மனைவி கோவப்படுவாங்க, என் வீட்டிலுள்ளவங்க கூட நீங்க ஒழுங்கா பேசறதே இல்லைன்னு. அதனால் நீங்க கண்டிப்பா பேசியாகணும். அதேநேரம் அதிகம் பேசிட்டீங்கன்னா அது மிகப்பெரிய ரிஸ்க். உங்க மனைவி உங்களை ஒரு CIA Agent -இன் கண்ணோட்டத்தில் இருந்து கவனிப்பாங்க. ஆக பேசினாலும் ரிஸ்க் பேசாட்டியும் ரிஸ்க், அளவோட இருக்கணும் - அதாவது F&O Trading மாதிரி.

ஒரு விழாவில் பேசும் போது, டைரக்டர் செல்வமணி சொன்னார், காதலிக்கும் போது அவருக்கும், நடிகை (அவரது இன்றைய மனைவி) ரோஜாவுக்கும் சண்டை வருவதே இல்லியாம், கல்யாணம் ஆகி மூன்று நாட்கள் கூட அவங்களால சண்டை போடாமல் இருக்க முடியலியாம். அப்போதான் யோசிச்சி பார்த்து அவர் ஒரு முடிவுக்கு வந்தாராம், மனைவியை ஜெயிக்க முடியாது, அதுக்கு முயற்சி பண்ணி கஷ்டப்படறதை விட, அவங்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போய்டறது நல்லதுன்னு. இதேதான் பங்குசந்தையும். சந்தையை நம்மால் ஜெயிக்க முடியாது, அதன் போக்கில் நாமும் போய்டணும்.

பங்கு சந்தை எந்த திசை நோக்கி போகுதுன்னு யாராலுமே உறுதியா கணிக்க முடியாது. நல்ல பட்ஜெட்-னு நினைச்சி ஷேர் வாங்குவோம், அடுத்த நாளே தலைகீழா விழும். சரி உலக சந்தை நிலவரம் சரி இல்லைன்னு அமைதியா இருக்க முடிவு செய்திருப்போம் அப்போதான் கிடு கிடுன்னு வேகமா சந்தை மேலே போய் இருக்கும். இதைபோல்தான் மனைவியும். என்ன சொல்ல வரேன்னா, கணிப்புகள் தவற வாய்ப்புகள் அதிகம், சந்தையில் தவறினால் பணம் நஷ்டம், வீட்டில் தவறினால் மனதுக்கு கஷ்டம் (சில சமயம் இதில் பணத்துக்கும் கஷ்டம் வரலாம், புடவை எடுக்க போன மாதிரி...!!!). அதனால் அதிகம் கணிப்பதை விட்டுட்டு, அதன் போக்கிலே போயிட்டா நல்லது.

சரி பதிவு ரொம்ப பெருசா போகுது அதனால் மேலே சொன்ன சில விதிகளோட இந்த பதிவை முடிச்சிக்கலாம். இன்னொரு முறை வாய்ப்பு இருந்தால் மேலும் சில விதிகளை பாப்போம். ஐயோ....ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்... உங்களுக்கு பிடிக்குதோ இல்லியோ...தினமும் ஒருமுறை உங்கள் மனைவியிடம்... I Love You -னு மறக்காம சொல்லிடுங்க...காலையிலே வீட்டில் கந்தசஷ்டி கவசம் சொல்றமாதிரி கண்டிப்பா சொல்லிடுங்க. (நான் தான் என் மனைவியை கல்யாணம் பண்ணிகிட்டேனே அதுக்கப்புறம் என் மனைவியை லவ்வும் பண்ணனுமான்னு குறுக்கு கேள்வி எல்லாம் கேட்க கூடாது. I Love You சொல்லுங்கன்னு தானே சொன்னேன்....!!!!)

சரி அடுத்த பதிவில் வழக்கமான பங்குச்சந்தை விஷயங்களை பாப்போம்.

4 comments:

guna said...

ரொம்ப நாள் ஆகி போச்சி, பதிவு எழுதி. அதனால், இனி வாரம் ஒரு பதிவு போடலாம்னு ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன், புது வருட தீர்மானம் போல் இல்லாமல் உண்மையாகவே வாரம் ஒரு பதிவு கண்டிப்பா எழுதிடலாம்னு இருக்கேன்.

THANKYOU THANKYOU THANKYOU

Anonymous said...

sir,its very useful,pls keep going

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

Anonymous said...

Super Thala..
I really enjoyed this humorous post.